×

இளைஞர், இளம் பெண்கள் பாசறை அரசுக்கும். மக்களுக்கும் பாலமாக செயல்பட வேண்டும் ஆலங்குளத்தில் முதல்வர் எடப்பாடி பேச்சு

ஆலங்குளம், பிப். 19: அரசின் நலத்திட்டங்களை பொதுமக்களுக்கு எடுத்துக்கூறும் பாலமாக இளைஞர், இளம்பெண்கள் பாசறையினர்  செயல்பட வேண்டுமென ஆலங்குளத்தில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று மாலை ஆலங்குளத்தில் உள்ள திருமண மண்டபத்தில் இளைஞர், இளம்பெண்கள் பாசறை, தொழில்நுட்ப பிரிவு சார்பில் நடந்த கலந்துரையாடலில் பங்கேற்றார். அப்போது முதல்வர் பேசியதாவது: இளைஞர், இளம்பெண்கள் பாசறை, தொழில்நுட்ப பிரிவு ஆகியோரின் பங்கு வரும் சட்டபை தேர்தலில் அதிகளவு இருக்க வேண்டும். இளைஞர்கள் நினைத்தால் எதையும் சாதிக்கலாம். இந்த தேர்தலிலும் சாதித்து காட்டுவீர்கள் என நம்புகிறேன். தகவல் தொழில்நுட்ப பிரிவினர், இளைஞர்கள் அரசின் பல்வேறு நலத்திட்டங்களை பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கும் பாலமாக விளங்க வேண்டும். இதன் மூலம் வரும் சட்டசபை தேர்தலில் அதிமுக வெற்றி பெற வழிவகுக்கும்.
பிற கட்சிகளை விட அதிமுகவில் உள்ள இளைஞர், இளம்பெண்கள் பாசறை பெரியவில் பங்குவகிப்பது பெருமையாக உள்ளது. ஒவ்வொரு சட்டபை தொகுதிகளிலும் 7500 பேர் நிர்வாகிகளாக உள்ளனர். இவர்கள் சட்டசபை தேர்தலில் அதிமுக வெற்றிக்கு பாடுபட வேண்டும். வேறு எந்த கட்சியிலும் இத்தகைய இளைஞர்களை கொண்ட பலமான கட்டமைப்பு இல்லை. நான் கல்லூரி படிக்கும் போது அதிமுகவில் இணைந்தேன். படிப்படியாக முன்னேறி தற்போது முதல்வராக உள்ளேன். சாமானியனை கூட உயர்ந்த நிலைக்கு அதிமுக உயர்த்தும்.

அனைவரும் கட்சிக்காக உழைத்து வருங்காலத்தில் நீங்கள் கூட எம்எல்ஏக்கள், எம்பிக்களாக, அமைச்சர்களாக ஆகலாம். இது ஜனநாயக அதிமுகவில் மட்டும் சாத்தியம். அதிமுகவில் நீங்கள் இருப்பதே பாக்கியம். எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் நாட்டு மக்களுக்காக வாழ்ந்து மறைந்த தலைவர்கள். அவர்கள் வழியில் அவர்களின் வாரிசுகளாக இருந்து அதிமுகவை வெற்றி பெற செய்து கோட்டையில் கொடி பறக்க செய்ய வேண்டியது நம்முடைய கடமை.
நெல்லை மாவட்டத்தில் இருந்து தென்காசியை பிரித்து தனி மாவட்ட அந்தஸ்து உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. படித்த இளைஞர்களின் எதிர்காலம் சிறக்க அதிமுக அரசு பாடுபட்டு வருகிறது. இதற்காக பல ஆயிரம் கோடி தொழில் முதலீடுகளை ஈர்த்து 28 தொழில் நிறுவனங்களை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 10 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். தென் மாவட்டங்களில் தொழில் துவங்க வருகிறவர்களுக்கு முதலீட்டை பெறவும், நிலம் வாங்கும் போதும் மானியம் வழங்கப்படுகிறது. கொரோனா தொற்று காலத்தில் கூட இளைஞர்களின் வேலைவாய்ப்பை அதிகரிக்க 60 ஆயிரம் கோடி தொழில் முதலீடுகளை தமிழகம் ஈர்த்துள்ளது. படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கித் தருவது அதிமுக அரசின் நோக்கமாகும். இளைஞர் பட்டாளத்தை கொண்ட அதிமுக சட்டசபை தேர்தலில் பெருவாரியான வெற்றியை ஈட்டித்தர வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் அமைச்சர்கள் உதயகுமார், ராஜலட்சுமி, நெல்லை மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா, தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் செல்வமோகன்தாஸ் பாண்டியன் எம்எல்ஏ, அமைப்பு செயலாளர் மனோஜ்பாண்டியன் மற்றும் இளைஞர், இளம்பெண்கள் பாசறை, தொழில் நுட்ப பிரிவு நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Tags : women ,state ,Edappadi ,Basara ,bridge ,speech ,Alangulam ,
× RELATED அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல்கள்: எடப்பாடி வேண்டுகோள்