தென்காசியில் மகளிர் குழுவினருடன் முதல்வர் கலந்துரையாடல்

தென்காசி, பிப். 19: தென்காசியில் அதிமுக பூத் மகளிர் குழுவினருடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. தெற்கு மாவட்ட செயலாளர் செல்வமோகன்தாஸ் பாண்டியன் எம்எல்ஏ வரவேற்றார். நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது, ஜெயலலிதா எந்த திட்டத்திலும் பெண்களுக்கு முன்னுரிமை வழங்கினார். அதனை நாங்களும் பின்பற்றுகிறோம். தேர்தல் சமயத்தில் சிறப்பாக பணியாற்றி அதிமுக வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்யவேண்டும். பெண்கள் முன்னேற்றத்திற்கு பெண் கல்வி, உள்ளாட்சி துறையில் 50 சதவீத இடஒதுக்கீடு என பல்வேறு திட்டங்களை ஜெயலலிதா அறிமுகப்படுத்தினார். தாலிக்கு தங்கம் திட்டத்தில் 4கிராம் தங்கம் 8 கிராமாக உயர்த்தப்பட்டது. 12,56,000 பேர்களுக்கு திருமண உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. சில தினங்களுக்கு முன் சேலத்தில் 99 ஆயிரம் பேருக்கு தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்தேன். இன்னும் 10தினங்களில் மேலும் ஒரு லட்சம் பேருக்கு வழங்க திட்டமிட்டிருக்கிறோம். சுய உதவிக்குழுவினருக்கு ரூ.82 ஆயிரம் கோடி வங்கிக்கடன் பெற்று கொடுத்திருக்கிறோம். பெண்களுக்கான பாதுகாப்பு அதிமுக அரசில் தான் கிடைக்கிறது. கர்ப்பிணிகளுக்கு நிதி வழங்கும் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது. அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு 14 வகை பரிசு பொருட்கள் 25 லட்சம் பேருக்கு வழங்கியிருக்கிறோம். பொங்கல் பரிசு ஆயிரத்தில் இருந்து 2500ஆக உயர்த்தி வழங்கப்பட்டது. ஏற்கனவே கொரோனா காலத்தில் ஆயிரம் ரூபாய் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டது. இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories:

>