×

சேரன்மகாதேவி, அம்பை, தென்காசி, வழியாக நெல்லை - சென்னை இடையே ‘தாமிரபரணி’ எக்ஸ்பிரஸ் ரயில் பொதுமேலாளரிடம் ஞானதிரவியம் எம்பி வலியுறுத்தல்

நெல்லை, பிப். 19:  நெல்லை வந்த தெற்கு ரயில்வே பொதுமேலாளரை எம்பிக்கள் (நெல்லை) ஞானதிரவியம், (தென்காசி) தனுஷ்குமார், பாளை எம்எல்ஏ மைதீன்கான் ஆகியோர் சந்தித்து  தனித்தனியாக பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை வழங்கினர். ஞானதிரவியம் எம்பி அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: சென்னை செல்லும் மக்களுக்கு வசதியாக, நெல்லையில் இருந்து சென்னை தாம்பரம் வரை சேரன்மகாதேவி, கல்லிடைக்குறிச்சி, அம்பை, பாவூர்சத்திரம், தென்காசி வழியாக ‘தாமிரபரணி எக்ஸ்பிரஸ்’ என்ற பெயரிட்டு வாரம் ஒரு முறை இயக்க வேண்டும். இதற்கு நெல்லையில் இருந்து தாதர் வரை செல்லும் ரயில் உபயோகமின்றி நெல்லையில் நிற்பதை பயன்படுத்த வேண்டும். நெல்லையில் இருந்து சேரன்மகாதேவி, கல்லிடைக்குறிச்சி, அம்பை, தென்காசி, கொல்லம் எர்ணாகுளம் வழியாக சோரனூர்- மங்களூர் பகுதிகளுக்கு செல்லும் வகையில் தனி ரயில் இயக்க வேண்டும்.
நெல்லை தியாகராஜநகரில் ரயில்வே மேம்பாலம் அமைக்க ஆயத்த வேலைகள் தொடங்கப்பட்டு பாதியில் நிற்கிறது. அதை விரைந்து முடிக்க வேண்டும். குலவணிகர்புரம் ரயில்வே கேட்டில் பாலம் அமைக்க முன்னரே ஒப்பந்தங்கள் போடப்பட்டு அதுவும் கிடப்பில் உள்ளது. தனிக்கவனம் செலுத்தி பாலம் அமைக்க வேண்டும்.

கொரோனா பெருந்தொற்று காரணமாக நிறுத்தப்பட்டிருந்த நெல்லை- செங்கோட்டை, திருச்செந்தூர், தூத்துக்குடி பயணிகள் ரயிலை போர்க்கால அடிப்படையில் இயக்க உத்தரவிட வேண்டும். பணகுடி ரயில் நிலையத்தில் அனந்தபுரி ரயில்கள் கொரோனாவுக்கு முன்னர் நின்று சென்றதுபோல் தற்போதும் நின்று செல்ல வேண்டும். வள்ளியூரில் விரைவு ரயில்கள் அனைத்தும் முதல் பிளாட்பாரத்தில் பயணிகளை ஏற்றி இறக்க வேண்டும். பாலருவி ரயிலுக்கு முன்பு போல் கீழக்கடையம், பாவூர்சத்திரத்தில் நிறுத்தம் அளிக்க வேண்டும். நாகர்கோவில்- தாம்பரம் ரயிலை தினமும் இயக்க வேண்டும். திருவனந்தபுரம்- மங்களூர் ரயிலை நெல்லை வரை இயக்க வேண்டும். திருவனந்தபுரம்- நாகர்கோவில் ரயிலை மெமோ ரயிலாக மாற்றி நெல்லை வரை நீடிக்க வேண்டும். திருவனந்தபுரம்- வேரவல் ரயில், கொச்சிவேலி- கங்கநகர் எக்ஸ்பிரஸ் ஆகியவை மும்பை மக்கள் பயன்படும் வகையில் மும்பைக்கு அருகே சென்று வருவதால் அவற்றை நெல்லை வரை நீட்டிக்க வேண்டும். இதனால் பல்லாயிரக்கணக்கான தென்தமிழகத்தினர் பயனடைவர். அந்தியோதயா ரயில் நாகர்கோவிலுக்கு காலை 8 மணிக்கு வரும் வகையிலும், தாம்பரத்திற்கு காலை 6 மணிக்கு செல்லும் வகையிலும் இயக்க வேண்டும்.
ேமலப்பாளையத்தில் மெமு ரயிலிற்கான செட் அமைக்க வேண்டும். நெல்லை சந்திப்பில் இருந்த கூட்டுறவு பண்டகசாலை கங்கைகொண்டான் ரயில் நிலையத்திற்கு மாற்றப்பட்டு உள்ளதால் 6வது பிளாட்பாரத்திலும் ரயில்களை நிறுத்தி இயக்கவும், மேற்கு பகுதியில் பயணிகள் வந்து செல்ல வசதியும் செய்ய வேண்டும்.

பிற ரயில் நிலையங்களில் உள்ளதுபோல் ப்ரீபெய்டு டாக்சி, ஆட்டோ கட்டண முறை நெல்லையில் அமல்படுத்த வேண்டும். நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் பயணிகள் நலன் கருதி மேற்கூரை முழுவதும் மூட வேண்டும். நடைமேடைகளில் டிஜிட்டல் லைட்டுகள் முழுமையாக ஒளிர வேண்டும். இருபுறங்களிலும் எஸ்கலேட்டர்கள் அமைக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார்.பின்னர் ஞானதிரவியம் எம்பி கூறுகையில், பொதுமேலாளர் உரிய நடவடிக்கை எடுக்க ஆவண செய்வதாக உறுதி அளித்ததாக தெரிவித்தார்.மைதீன்கான் எம்எல்ஏ வழங்கிய மனுவில், நெல்லை ரயில் நிலையத்தில் ஊனமுற்றோர் முதியோருக்கு தனி முன்பதிவு கவுன்டர் மீண்டும் செயல்பட வேண்டும், திருவனந்தபுரம்போல் பயணிகள் தங்கும் அறை அமைக்க வேண்டும், என்றார். முன்னாள் எம்எல்ஏ மாலைராஜா, பகுதி செயலாளர்கள் கோபி என்ற நமசிவாயம், அப்துல்கயூம், அண்ணாதுரை மற்றும் மீரான், மீனவரணி ஜூடு உள்ளிட்ட திமுகவினர் உடனிருந்தனர்.



Tags : Cheranmakhadevi ,Ambai ,Gnanathiraviyam ,Tenkasi ,Chennai ,Nellai ,Thamiraparani ,
× RELATED தமிழ்நாட்டில் அதிகபட்சமாக நெல்லை...