×

தமிழில் உறுதிமொழி எடுத்துக்கொண்டார் புதுச்சேரி துணை நிலை ஆளுநராக தமிழிசை பொறுப்பேற்பு

புதுச்சேரி, பிப். 19: புதுச்சேரியின் புதிய துணை நிலை ஆளுநராக தமிழிசை சவுந்தரராஜன் பொறுப்பேற்றுக்கொண்டார். புதுச்சேரி  துணை நிலை ஆளுநராக தெலங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு கூடுதல்  பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை கடந்த 16ம் தேதி குடியரசு  தலைவர் ராம்நாத் கோவிந்த் பிறப்பித்தார். அதன்படி நேற்று காலை  9.07 மணிக்கு புதுச்சேரி துணை நிலை ஆளுநராக தமிழிசை சவுந்தரராஜனுக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி பதவி  பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.பின்னர் தமிழிசை  சவுந்ரராஜன் தமிழில் உறுதி மொழி கூறி முறைப்படி பதவியேற்று கொண்டார். அப்போது, புதுச்சேரி மக்கள் நலனுக்காகவும், பாதுகாப்புக்காகவும் என்னை  அர்ப்பணித்துக்கொள்வேன்’ என உறுதி கூறி  பதவியேற்றுக்கொண்டார். பின்னர் 9.14 மணிக்கு பதவியேற்பு விழா நிறைவடைந்தது.

தொடர்ந்து,  கவர்னர் மாளிகை வெளியே போலீஸ் அணிவகுப்பு மரியாதையை ஆளுநர் தமிழிசை  ஏற்றுக்கொண்டார். பின்னர், அவருக்கு முதல்வர் நாராயணசாமி, சபாநாயகர்  சிவக்கொழுந்து, அமைச்சர்கள் கந்தசாமி, கமலக்கண்ணன், காங்கிரஸ் எம்எல்ஏக்கள்  அனந்தராமன், ஜெயமூர்த்தி, எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமி,  என்.ஆர்.காங்கிரஸ் எம்எல்ஏக்கள் திருமுருகன், டிபிஆர் செல்வம், கோபிகா,  சந்திர பிரியங்கா, சுகுமாறன், ெஜயபால், அதிமுக எம்எல்ஏக்கள் அன்பழகன்,  வையாபுரி மணிகண்டன், பாஸ்கர், திமுக எம்எல்ஏக்கள் சிவா, வெங்கடேசன், பாஜக  தலைவர் சாமிநாதன் எம்எல்ஏ, முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம், நியமன  எம்எல்ஏக்கள் செல்வகணபதி, தங்க.விக்ரமன், புதுச்சேரி பாஜக மேலிட  பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா உள்ளிட்ட பலர் பூங்கொத்து கொடுத்து  வாழ்த்து தெரிவித்தனர்.  புதுச்சேரியில் 31வது துணை நிலை ஆளுநராகவும், 5வது பெண் கவர்னராகவும், தமிழ் தெரிந்த ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Pondicherry ,Deputy Governor ,
× RELATED வாலாஜாபாத் வடக்கு ஒன்றிய பகுதிகளில்...