×

அரசியல் உள்நோக்கத்தோடு இங்கு வரவில்லை புதுவை மக்களின் ஆளுநராக செயல்படுவேன் தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி

புதுச்சேரி, பிப். 19: புதுவை மக்களின் ஆளுநராக செயல்படுவேன் என கவர்னராக பொறுப்பேற்ற தமிழிசை நேற்று கூறியுள்ளார். புதுச்சேரியின் புதிய துணை நிலை ஆளுநராக பொறுப்பேற்றுள்ள தமிழிசை சவுந்தரராஜன்  புதுச்சேரியின் அதி முக்கியமான பிரச்னைகள் குறித்த கேள்விகளுக்கு நச்சென்று பதிலளித்துள்ளார். கேள்வி: எதிர்க்கட்சிகள் கொடுத்துள்ள  நம்பிக்கை இல்லா தீர்மானம் கோரும் மனு மீது எப்போது நடவடிக்கை  எடுக்கப்படும்?பதில்: எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கோரும் கடிதத்தை   கொடுத்துள்ளனர். இப்போது தான் இங்கு வந்திருக்கிறேன்.  இனிமேல் தான் இது  சம்பந்தமாக  அலசி ஆராய்ந்து அரசியலமைப்பு சட்ட விதிகளுக்கு உட்பட்டு முடிவு  செய்வேன்.  மேலும், என்னை சந்திக்க பல்வேறு கட்சி தலைவர்கள் அனுமதி  கேட்டுள்ளனர்.  அவர்களையெல்லாம் சந்தித்த பிறகே முடிவெடுக்க முடியும்.கேள்வி: ஒரே  நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை மத்திய அரசு அனைத்து மாநிலங்களில்  அமல்படுத்தி வரும் வேளையில், புதுச்சேரியில் ரேஷன் கடைகளும் இல்லை.  அரிசியும் போடுவதில்லை என்பது முரணாக இருக்கிறதே?

பதில்: புதுச்சேரியை வெளியில்  இருந்து பார்ப்பவர்கள் இது பிரெஞ்சு காலனி ஆதிக்கத்தில்  இருந்ததாலும்,  மருத்துவ கல்லூரிகள் அதிகமாக இருப்பதாலும் மக்கள் அனைவரும்  செல்வ  செழிப்போடு இருப்பதாக கருதுகிறார்கள். அவர்களுக்கு இங்கு என்ன  பிரச்னை  இருக்கிறது என்று ெதரியாது. இங்கும் பசியால் வாடும் ஏழை, பாமர  மக்களும்  இருக்கிறார்கள். அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தோடு   வந்துள்ளேன். பொதுவினியோக திட்டத்தை மறு ஆய்வு செய்து அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வதற்கு  முயற்சி எடுப்பேன். கேள்வி: கவர்னரை  மக்கள் சந்திக்க முடியாத படியும், தெருவில் நடமாட முடியாத வகையில் துணை  ராணுவம் குவிக்கப்பட்டு தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதனை எப்போது  அகற்றுவீர்கள்? பதில்: மக்களுக்கும் எனக்கும் எந்த இடைவெளியும் இருக்க கூடாது என  நினைக்கிறேன்.  மக்கள் என்னை சந்திக்க தடை ஏதும் இல்லை. இடைவெளி தடுப்பும்  இனி இருக்காது.  ஏனெனில் நான் ஒரு மருத்துவர் என்ற அடிப்படையில் கொரோனா  காலத்திலும் கூட கவச  உடை அணிந்து மருத்துவமனைக்கு சென்று பணியில் இருந்த  மருத்துவர்களை  ஊக்கப்படுத்தியிருக்கிறேன்.

 கடந்த காலத்தில் கவர்னராக  இருந்தவர்களின்  செயல்பாடுகள் குறித்து விமர்சனம் செய்யக் கூடாது.  அவர்களுக்கு என்று ஒரு பாணி  இருக்கிறது. எனக்கென்று ஒரு பாணி உள்ளது. அதை பின்பற்றி நான்  நடந்துகொள்வேன்.
கேள்வி: கவர்னர் முதல்வர் அதிகார மோதல்களால் மக்கள் அதிகப்படியாக பாதிக்கப்பட்டுள்ளனரே? இந்த நிலைமை தாங்கள் பொறுப்பேற்ற பிறகு மாறுமா? யாருடைய  அதிகாரத்தையும் பறித்து கொள்ளவோ?, அவர்களது  அதிகாரத்தில் தலையிடவோ  மாட்டேன். அவரவர்களுக்கு எந்த அதிகாரம் இருக்கிறதோ  அதற்கு உட்பட்டு நடந்து  கொள்வேன்.தேர்வு செய்யப்பட்ட அரசுடன் இணக்கமாக  இருப்பேன். யாருடைய  அதிகாரம் எந்த அளவுக்கு என்பது எனக்கு தெரியும்.  அதிகாரம் என்பது  ஒடுக்கப்பட்ட, ஏழை மக்களுக்கு நல்லது செய்வது தான். எனவே,  சட்ட  விதிகளுக்கு உட்பட்டு தான் நடந்து கொள்வேன். அரசியல் உள்நோக்கத்துடன்  நான்  இங்கு வரவில்லை. என்னால் எந்த அளவுக்கு மக்களுக்கு பணியாற்ற முடியும்   என்பதிலேயே என் கவனம் உள்ளது.

தெலங்கானாவில் கூட ராஜ்பவனை பிரஜா பவன்   என்றே அழைக்கிறார்கள். அதேபோல ராஜ்நிவாசும் மக்கள் நிவாசாக செயல்படும்.   மக்கள் எப்போதும் என்னை சந்திக்கலாம். நானும் மக்களுடன் மக்களுக்கான   கவர்னராக பணியாற்றுவேன்.  கேள்வி: தேர்தல் வரவுள்ள நிலையில் தமிழ்பேசும் தேர்தல் அதிகாரியை மாற்றிவிட்டு, வடமாநில அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருப்பதால், தேர்தலை நடத்துவதில் தொய்வு ஏற்படக்கூடிய நிலைமை இருக்கிறது. அதோடு தமிழ் பேசும் அதிகாரிகள் புறக்கணிக்கப்படுகிறார்களே? பதில்: தற்போதுதான் வந்திருக்கிறேன்.விசாரித்துவிட்டு நடவடிக்கை எடுக்கிறேன். தமிழ் என் உயிரிலே கலந்துள்ளது. தமிழை எல்லோரும் ஆராதிக்கிறார்கள். தமிழுக்கு மகுடம் சூட்டப்படும் என்றார். இவ்வாறு அவர் கூறினார்

Tags : governor ,
× RELATED எனது விருப்பத்தின் பெயரில் மக்கள்...