×

சிவகாசி சிவன் கோயில் திறந்திருக்க கோரிக்கை

சிவகாசி, பிப். 19: சிவகாசி சிவன் கோயில் நடையை இரவு 9 மணி வரை திறந்து வைத்திருக்க  பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சிவகாசியில் பிரசித்தி பெற்ற சிவன் கோயில் உள்ளது. இக்கோயில் 200 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது.  சிவகாசி மையப்பகுதியில் சிவன் கோயில் அமைந்துள்ளதால் தினமும் ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வந்து செல்கின்றனர். காசிவிஸ்வநாதர், விசாலாட்சி அம்மன் மூலவர்களாக காட்சி அளிக்கின்றனர்.  கோயிலின் உள்ளே துர்க்கை அம்மன், தட்சிணாமூர்த்தி, முருகன், பைரவர், நவக்கிரகங்களும் நிறுவப்பட்டுள்ளதால் பெண்கள் தினமும் இந்த கோயிலுக்கு அதிகம்  வந்து செல்கின்றனர். பிரதோஷம் போன்ற விசேஷ தினங்களில் சிவகாசி மற்றும் சுற்றியுள்ள கிராமப்பகுதிகளைச் சேர்ந்த பக்தர்களும் கோயிலுக்கு வந்து சுவாமிதரிசனம் செய்கின்றனர். சிவகாசி சிவன் கோயில் அறநிலைய துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ளது. கொரோனா ஊரடங்கு காலத்தில் இந்த கோயிலில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய தடை விதித்திருந்தனர்.

 ஊரடங்கு தளர்வு அறிவிக்கபட்டதால் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பிரதோஷம் மற்றும் விசேஷ நாட்களில் பக்தர்கள் அதிக அளவில் கோயிலுக்கு வந்து செல்கின்றனர். கொரோனா ஊரடங்கு அறிவிப்புக்கு முன்னர் காலை 6 மணிமுதல் மதியம் 1 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு  9 மணி வரையிலும் சிவன் கோயில் நடை திறந்திருக்கும். கொரோனா ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்ட பின் இரவு 8 மணி வரை நடை திறக்கப்பட்டது. தற்போது முழு ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டு சிவகாசி சிவன் கோயிலில் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கோயில் நடைமட்டும் வழக்கத்திற்கு மாறாக இரவு 8 மணிக்கே மூடப்பட்டு விடுகிறது. இதனால் இரவு நேரங்களில் கோயிலுக்கு வரும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். இதுகுறித்து அறநிலையத்துறை அதிகாரிகளிடம் கேட்டால், அரசிடம் இருந்து இதுவரை எந்த உத்தரவும் வரவில்லை என்றும், கொரோனா ஊரடங்கு காலத்தில் இருந்த உத்தரவுபடி கோவில் நடை சாத்தப்படுகிறது என்றும் கூறுகின்றனர். சிவகாசி சிவன் கோயில் நடையை  வழக்கம் போல் இரவு 9 மணிவரை திறந்து வைத்திருக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Sivakasi Shiva Temple ,
× RELATED 16ம் நூற்றாண்டை சேர்ந்த சிவகாசி சிவன்...