செவல்பட்டி ஆரம்ப சுகாதார நிலையம் அரசு மருத்துவமனையாக தரம் உயருமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு

சிவகாசி, பிப். 19: வெடி விபத்தில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க செவல்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை 30 படுக்கை வசதியுடன் கூடிய 24 மணிநேரமும் செயல்படும் மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும் என கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வெம்பக்கோட்டை தாலுகாவில் 271 பட்டாசு ஆலைகள் செல்பட்டு வருகின்றன. குறிப்பாக செவல்பட்டியை சுற்றியுள்ள கொட்டமடக்கிபட்டி, மேலாண்மநாடு, அம்மையார்பட்டி, மீனாட்சிபுரம், குகன்பாறை, அலமேலுமங்கைபுரம் உள்பட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் பட்டாசு ஆலைகள் அதிகம் உள்ளன. செவல்பட்டியில் அரசு ஆரம்ப சுகாதாரநிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு ஒரு மருத்துவர், 2 கிராம சுகாதார செவிலியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். செவல்பட்டியை சுற்றிலும் உள்ள கிராமமக்கள் சிகிச்சைக்காக இந்த ஆரம்ப சுகாதார நிலையத்திகே வந்து செல்கின்றனர். தினமும் 50க்கும் மேற்பட்டவர்கள் வெளிநோயாளிகளாக சிகிச்சை பெற்று செல்கின்றனர். அவசர சிகிச்சைக்கு 15 கி.மீ தூரம் உள்ள திருவேங்கிடம் அல்லது சிவகாசி அரசு மருத்துவமனைக்கு வந்து செல்கின்றனர்.

இதனால் அவசர காலங்களில் கிராமமக்கள் உடனடி சிகிச்சை பெற முடியாமல் அவதிப்படுகின்றனர். குறிப்பாக பட்டாசு ஆலை விபத்தின் போது காயமடைந்தவர்கள் ஆரம்ப சுகாதார மருத்துவமனையில் போதிய மருத்துவ வசதிகள் இல்லாததால் சிவகாசி, சாத்தூர், கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுகின்றனர். உடனடி மருத்துவ சிகிச்சை பெற முடியாமல் பலர் உயிரிழக்கும் நிலை உள்ளது. இதேபோன்று கர்ப்பிணி பெண்கள் பிரசவ காலங்களில் சிகிச்சை பெறுவதிலும் பாதிப்பு நிலவுகிறது. அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய கர்ப்பிணி பெண்கள் சிவகாசி அல்லது விருதுநகர் தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். இதனால் குழந்தை பிறப்பதில் பாதிப்பு ஏற்பட்டு, கர்ப்பிணி பெண்கள் பலியாகும் சோகமும் நடக்கிறது. எனவே, செவல்பட்டியில் 24 மணிநேரமும் செல்படும் தரம் உயர்த்தப்பட்ட 30 படுக்கை வசதியுடன் கூடிய அரசு மருத்துவமனை துவங்க வேண்டும் என கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>