×

வருவாய்த்துறை அலுவலர் சங்கம் ஆர்ப்பாட்டம்

தேனி, பிப். 19: தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேனி கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாவட்ட தலைவர் ராமலிங்கம் தலைமை வகித்தார். மாநில துணைத்தலைவர்கள் தமிழ்மணி, பாலமுருகன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். ஆர்ப்பாட்டத்தில், ‘அலுவலக உதவியாளர் முதல் வட்டாட்சியர் வரை உள்ளவர்களுக்கு மேம்படுத்தப்பட்ட ஊதியம் தனி ஊதியம் வழங்க வேண்டும். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையில் புதிதாக நியமனம் செய்யப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட தலைநகரங்களில் அடிப்படை பயிற்சி நில அளவை பயிற்சி அளிப்பதில் விலக்கு அளிக்க வேண்டும்.

 மாவட்ட அலுவலகங்களில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் இரவுக் காவலர், மசால்ஜி, பதிவுரு எழுத்தர், ஜீப் ஓட்டுநர் உள்ளிட்ட பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதில் மாவட்ட நிர்வாகிகள் கண்ணன், வடிவேல், நாகராஜ், ஜாகிர்கான், ஒச்சாதேவன், அன்பரசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Revenue Officers Association Demonstration ,
× RELATED பைக் மீது லாரி மோதி பெண் உயிரிழப்பு