தாயின் நடத்தையை அவதூறாக பேசியதால் தந்தை அடித்துக் கொலை தாய், மகன் கைது

கூடலூர், பிப்.19: தேனி மாவட்டம், குள்ளப்பகவுண்டன்பட்டியில் உள்ள வண்ணாத்திபாறை துணை மின்நிலையத்தில் தேவதானப்பட்டியைச் சேர்ந்த சின்னகருப்பையா (50) வயர்மேனாக பணிபுரிந்து வந்தார். இவர், மனைவி விஜயா, மகன் விஜய் (21) ஆகியோருடன் கூடலூர் கன்னிகாளிபுரத்தில் குடியிருந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் குடிபோதையில் வீட்டுக்கு வந்த சின்னகருப்பையா, மனைவியின் நடத்தை குறித்து அவதூறாக பேசியுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த விஜய் தனது தந்தையை கழுத்தை நெறித்து கீழே தள்ளி தாக்கினார். இதில் சம்பவ இடத்திலேயே சின்ன கருப்பையா உயிரிழந்தார். இது குறித்து தனது தாயிடம் கூறவே அவர்கள் இரண்டு பேரும் சேர்ந்து சின்னகருப்பையா உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார் என சொந்த ஊரான தேவதானப்பட்டிக் கு அடக்கம் செய்ய கொண்டு சென்றனர். ஆனால், அவரது உடலில் காயங்கள் இருந்ததை கண்டு உறவினர்கள் சந்தேகமடைந்தனர். இது குறித்து பக்கத்து வீட்டில் வசிக்கும் கருப்பசாமி (30), கூடலூர் தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் எஸ்.ஐ கணேசன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில், விஜய் தன் தந்தையை கொலை செய்ததை ஒத்துக் கொண்டார். இதனையடுத்து விஜய் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த தாய் விஜயா ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

Related Stories:

>