×

தேர்தலில் வாக்களிக்க வலியுறுத்தி பெற்றோர்களுக்கு மடல் எழுதிய மாணவர்கள்

நாகர்கோவில், ஏப்.3: நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலில் பெற்றோர்கள் வாக்குச்சாவடிக்கு சென்று தவறாமல் வாக்களிக்க வேண்டுமென்பதை வலியுறுத்தி பள்ளி மாணவர்கள் தங்கள் பெற்றோர்களுக்கு மடல் எழுதி அழைப்பு விடுத்தனர். இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலுக்கிணங்க, தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டர் அழகுமீனா, வழிகாட்டுதலின்படி பல்வேறு விதமான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வருகின்ற 23ம் தேதி அன்று நடைபெறுவதை முன்னிட்டு, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைவரும் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதன் அடிப்படையில் மாவட்ட நிர்வாகம் அனைத்துத் துறைகளையும் ஒருங்கிணைத்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக கடந்த தேர்தலில் வாக்கு சதவீதம் குறைந்த பகுதிகளில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் அதிக அளவு வாக்கு சதவீதத்தை உயர்த்திடும் நோக்கத்தில் இதுபோன்ற முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டு வருகிறது.

அதனடிப்படையில் நாகர்கோவில், கோட்டார், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அரசு தொடக்க மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் தங்கள் பெற்றோருக்கு அழைப்பிதழ் தயாரித்து, வாக்களிப்பு வைபவத்திற்கு வருகை தர அழைக்கும் நிகழ்வு நடைபெற்றது. அங்குள்ள அரசு தொடக்க மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாணவர்கள் சிறப்பாக பங்கு பெற்று மகிழ்ச்சியுடன் தங்கள் பெற்றோரிடம் அழைப்பிதழ்களை அளித்தார்கள். தொடக்கப் பள்ளியில் 50 மாணவர்களும், மேல்நிலைப் பள்ளியில் 200 மாணவர்களும் வண்ணமயமாக அழைப்பிதழ்கள் தயாரித்து, அவ்வழைப்பிதழ்களை தங்கள் பெற்றோரிடம் அளித்து வருகின்ற ஏப்ரல் 23ம் தேதி மறக்காமல் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்குப்பதிவு செய்யுங்கள் என அன்புடன் வேண்டினார்கள். விழிப்புணர்வு நிகழ்ச்சியில் உதவி ஆட்சியர் பயிற்சி ராகுல்குமார், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பிரின்ஸ் ஆரோக்கிய ராஜ், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவ மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Nagercoil ,Tamil Nadu Assembly elections ,Election Commission of India ,Kanyakumari… ,
× RELATED அனுமதியின்றி மஞ்சுவிரட்டு 5 பேர் மீது வழக்குப்பதிவு