×

கொரோனா ஊரடங்கால் டீக்கடை அடைப்பு வாடகை பாக்கி கேட்ட நோட்டீசுக்கு ஐகோர்ட் தடை

மதுரை, பிப். 19: கொரோனா ஊரடங்கால் கடை அடைக்கப்பட்ட காலத்திற்கும் வாடகை பாக்கி கேட்ட நகராட்சி நோட்டீசிற்கு ஐகோர்ட் கிளை இடைக்காலத் தடை விதித்துள்ளது. தேனி மாவட்டம், போடி எஸ்.எஸ்.புரத்தைச் சேர்ந்த னிவாசன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: போடி புதிய பேருந்து நிலையத்தில் டீ கடை வைத்துள்ளேன். இதற்காக மாதம் வாடகையாக ரூ.11,800 நகராட்சிக்கு செலுத்துகிறேன். கொரோனா ஊரடங்கால் கடந்தாண்டு மார்ச் 25 முதல், இந்தாண்டு ஜன.3 வரை கடை மூடப்பட்டது. இதன் பிறகு ஜன.3 முதல் தான் டீக் கடையை மீண்டும் நடத்தி வருகிறேன். இந்நிலையில், வாடகை பாக்கி ரூ.1,88,800ஐ உடனடியாக செலுத்துமாறு நகராட்சி ஆணையர் கடந்த டிச.30ல் நோட்டீஸ் கொடுத்துள்ளார். உடனடியாக பாக்கியை செலுத்தாவிட்டால் கடையை பூட்டிவிடுவதாக நகராட்சி ஊழியர்கள் கூறுகின்றனர்.

கடைகள் அடைக்கப்பட்டிருந்த மாதங்களுக்கான வாடகையை செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும். கடை வாடகை பாக்கிக்கான நோட்டீசை ரத்து செய்து, டீ கடையை தொடர்ந்து நடத்த அனுமதிக்குமாறு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.இந்த மனுவை நீதிபதி பார்த்திபன் விசாரித்தார். மனுதாரர் வக்கீல் நீலமேகம் ஆஜராகி, கொரோனா ஊரடங்கால் கடந்தாண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான 9 மாதம் கடை அடைக்கப்பட்டிருந்தது. இந்த காலத்தில் எந்தவித வருமானமும் இல்லை. எனவே, இந்த காலத்திற்கும் சேர்த்து வாடகை கேட்பது நியாயமற்றது என்றார். இதையடுத்து நீதிபதி, கடை வாடகை பாக்கி கேட்டு நோட்டீஸ் அனுப்பிய நகராட்சி கமிஷனர் நோட்டீசிற்கு இடைக்காலத் தடை விதித்து, விசாரணையை மார்ச் 25க்கு தள்ளி வைத்தார்.

Tags : Corona ,curfew tea shop ,iCourt ,
× RELATED 2021-ல் கிருஷ்ணகிரி சட்டமன்ற தொகுதியில்...