×

திருக்கோஷ்டியூர் கோயிலில் மாசிமக தெப்ப உற்சவ திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம் 28ம் தேதி தீர்த்தவாரி

திருப்புத்தூர், பிப்.19:  திருப்புத்தூர் அருகே உள்ள திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப்பெருமாள் கோயில் மாசிமக தெப்ப உற்சவ விழாவையொட்டி நேற்று கொடி மரம் அருகே விஷ்ணு பூத பீடத்திற்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து காலை 11 மணியளவில் கருடன் படம் வரையப்பட்ட வெள்ளை நிற கொடி கொடிமரத்தில் ஏற்றப்பட்டு அபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து பெருமாளுக்கும் ஸ்ரீதேவி, பூமிதேவியருக்கும், உடன் பட்டாட்சியருக்கும் காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்று முதல் நாள் விழா துவங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். இரவு சுவாமி திருவீதி புறப்பாடு நடந்தது. 2ம் நாள் முதல் 6ம் நாள் வரை தினந்தோறும் காலையில் சுவாமி திருவீதி புறப்பாடும்,  இரவு பல்வேறு வாகனத்தில் பெருமாள் எழுந்தருளி திருவீதி புறப்பாடும் நடைபெறும். 6ம் நாளான பிப்.23ல் இரவு திருவீதி புறப்பாடும், ஆண்டாள் சன்னதியில் மாலை மாற்றுதலும் நடைபெறும். 7ம் நாளான பிப்.24ல் மாலையில் சுவாமி சூர்ணாபிஷேகம், தங்கத் தோளுக்கினியானில் திருவீதி புறப்பாடு நடைபெறும். 8ம் நாளான பிப்.25ல் காலையில் சுவாமி திருவீதி புறப்பாடும், இரவு குதிரை வாகனத்தில் புறப்பாடும் நடைபெறும்.

 9ம் திருநாளான பிப்.26ல் காலையில் வெண்ணைத்தாழி சேவையில் பெருமாள் திருவீதி புறப்பாடும், பின்னர் பகல் 12.45 மணியளவில் தெப்பம் முட்டுத்தள்ளுதலும், இரவு பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி அன்னவாகனத்தில் திருவீதி புறப்பாடு நடைபெறும். 10ம் திருநாளான பிப்.27ல் காலை பெருமாள் தங்கத்தோளுக்கினியானில் திருவீதி புறப்பாடும், பகல் 11.30 மணியளவில் தெப்பம் சுற்றுதலும், இரவு 9 மணிக்கு பெருமாள் ஸ்ரீதேவி, பூமிதேவியாருடன் மின்ஒளியால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளி தெப்ப உற்சவம் நடைபெறும். 11ம் நாளான பிப்.28ம் தேதி காலையில் தீர்த்தவாரி நடைபெறும். இரவு பெருமாள் தங்கத்தோளுக்கினியானில் ஆஸ்தானத்திற்கு எழுந்தருளளும், ஆசிர்வாதமும் நடைபெறும்.



Tags : Tirthwari ,Thirukkoshtiyur Temple ,Masimaka Theppa Ursava Festival ,
× RELATED தீர்த்தவாரி உற்சவ நிகழ்ச்சிக்காக...