×

திட்டங்களில் பயனடைய மத்திய அரசின் இணையதளத்தில் தொழில் நிறுவனங்கள் பதியலாம் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தல்

சிவகங்கை, பிப்.19:  சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மத்திய அரசின் இணையதளத்தில் பதிவு செய்து பயனடையலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். சிவகங்கை மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவித்துள்ளதாவது: குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் பொருட்கள் நேரடியாக கொள்முதல் செய்வதற்காக மத்திய அரசின், தொழில் வர்த்தக அமைச்சகம் இணையதளம் உருவாக்கியுள்ளது. மத்திய மற்றும் மாநில அரசுத்துறைகளின் கொள்முதலில் பங்கேற்று தங்கள் உற்பத்தி மற்றும் சேவைகளை அளிக்க விரும்பும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மத்திய அரசு உருவாக்கியுள்ள www.india.gov.in/spot   என்ற இணையதளத்தில் தங்கள் நிறுவனத்தை பதிவு செய்து, அரசு துறைகள் வெளியிடும் டெண்டரில் பங்கேற்று பயனடையலாம். இணையதளத்தில் பதிவு செய்வதால் அரசு துறைகள் தங்களுக்கு தேவையான பொருட்களை, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்ய இயலும்.

அவ்வாறு கொள்முதல் செய்யும் பொழுது இடைத்தரகர்களை தவிர்த்து நேர்மையான ஊழலற்ற வர்த்தகம் நடைபெறும். இந்த நடைமுறையை பின்பற்றுவதால் பல பொருட்களை ஒரே நேரத்தில் கொள்முதல் செய்யவும், நிறுவனங்கள் தங்கள் உற்பத்தி பொருட்கள் மற்றம் சேவைகள் குறைந்த விலையில் அளிக்கவும், நிர்வாக செலவுகளை தவிர்க்கவும் ஏதுவாகிறது. ஏற்கனவே, இந்த இணையதளத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் பதிவு செய்து பல கோடி மதிப்பிலான உற்பத்தி பொருட்களை அரசு துறைகளுக்கு சப்ளை செய்து பயனடைந்து வருகின்றனர். எனவே, சிவகங்கை மாவட்டத்தில் தொழில் நிறுவனங்கள் இணையதளத்தில் பதிவு செய்து பயனடையலாம்.  இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Businesses ,Federal Government ,
× RELATED டெல்லியில் மீண்டும் போராட்டம் நடத்த...