×

சுய உதவிக்குழுவினர் தயாரிக்கும் பொருட்களுக்கு தனி வாரச்சந்தை

சிவகங்கை, பிப்.19: சுய உதவிக்குழுக்கள் தயாரிக்கும் பொருட்களுக்கு தனி வாரச்சந்தை நடக்க உள்ளது. சிவகங்கை கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள அறிக்கை: சிவகங்கை மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் மூலம் மகளிர் சுயஉதவிக் குழுக்களின் தற்சார்பின்மைக்காக பல்வேறு பொருளாதார நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதில் ஒருபகுதியாக தற்போது நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் வாரச்சந்தை அல்லாத நாட்களிலும் மக்களின் தேவைகளை நிவர்த்தி செய்திடும் பொருட்டு மகளிர் சுயஉதவிக் குழு உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்ய சிறப்பு வாரச்சந்தை நடக்க உள்ளது. திருப்பத்தூர் மற்றும் சிங்கம்புணரி பேரூராட்சிகளில்    திங்கள்கிழமை,     நாட்டரசன்கோட்டை    பேரூராட்சியில் புதன்கிழமை, திருப்புவனம் பேரூராட்சியில் வியாழக்கிழமை, மானாமதுரை மற்றும் கண்டனூர் பேரூராட்சிகளில் வெள்ளிக்கிழமை, பள்ளத்தூர் மற்றும் புதுவயல் பேரூராட்சிகளில் சனிக்கிழமை வாரச்சந்தை நடக்க உள்ளது.

இதில் சுய உதவிக்குழுவினை சேர்ந்த பெண்கள் தயாரிக்கும் மளிகைப்பொருட்கள், பழங்கள், காய்கறிகள், அழகு சாதனப்பொருட்கள், பொம்மைகள், பூஜை விளக்குகள், ஜவுளிகள், செட்டிநாடு சிற்றுண்டி வகைகள், பாரம்பரிய உணவுப்பொருட்கள், அலங்கார ஆபரணப் பொருட்கள், வயர்க்கூடைகள், பைகள், மிதியடிகள், வத்தல், வடகம், ஊறுகாய், கருவாடு, பனைஓலை பொருட்கள், பாக்குமட்டைத் தட்டுகள், இயற்கை உரங்கள்,  பூச்சி விரட்டி ஆகியவை விற்பனை செய்யப்பட உள்ளது. எனவே பொதுமக்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார். 

Tags :
× RELATED வறட்சியின் பிடியில் நீர் நிலைகள்...