முதுகுளத்தூர் அரசுப்பள்ளியில் சேதமான கட்டிடத்தில் படிக்கும் மாணவர்கள்

சாயல்குடி, பிப்.19: முதுகுளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி கட்டிடம் சேதமடைந்து உள்ளதால் விபத்து ஏற்படும் அபாயம் நிலவுகிறது. கட்டிடங்களை சீரமைக்க வேண்டும் என மாணவர்கள் வலியுறுத்தியுள்ளனர். முதுகுளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில்  900க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இதனை சுற்றியுள்ள ஊர்களில் மேல்நிலைப்பள்ளி இல்லாததால் கிடாத்திருக்கை, ஏனாதி, சித்திரங்குடி, மு.தூரி, எட்டிச்சேரி, இலந்தைகுளம், கொண்டுலாவி, இறைச்சிக்குளம், கூவர்கூட்டம், எஸ்.பி.கோட்டை, காத்தனேந்தல், பொசுக்குடி, எம்.சாலை, பூக்குளம், வெண்ணீர்வாய்க்கால், ஒருவானேந்தல், நெடுங்குளம், கண்டிலான், இளஞ்செம்பூர் மற்றும் முது குளத்தூர் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து மாணவர்கள் வந்து படித்து செல்கின்றனர். இப்பள்ளியில் போதிய தரமான, கூடுலான வகுப்பறை கட்டிடங்கள் இல்லை. இடம் நெருக்கடியால் பாழடைந்த கட்டிடத்தில் வகுப்புகள் நடந்து வருகிறது. விபத்து ஏற்படும் அபாயகரமான சூழ்நிலையால் படிப்பில் போதிய கவனம் செலுத்த முடியவில்லை என மாணவர்கள் புகார் கூறுகின்றனர்.

இது குறித்து மாணவர்கள் கூறும்போது, பள்ளியில் நல்ல நிலைமையில் சில கட்டிடங்கள் மட்டுமே உள்ளன. கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் இல்லை. சமூக இடைவெளியில் பாடம் நடத்தப்படுவதால் போதிய இடம் வசதி இல்லை, இதனால் அரசு கல்லூரி நடந்த பழைய வகுப்பறை கட்டிடங்களில் வகுப்புகள் நடத்தப்படுகிறது. அந்த கட்டிடத்தில் மேற்கூரை, பக்கவாட்டு மற்றும் தரைத்தளம் சேதமடைந்து கிடக்கிறது. விரிசல்களில் தேள், பாம்பு போன்ற விஷ ஜந்துகள் இருந்து வருகின்றன. இத்தகைய அபாய சூழலில் பாடம் பயிலும் அவலம் உள்ளது. எனவே சேதமடைந்த வகுப்பறையை மராமத்து செய்ய வேண்டும், மற்ற வகுப்புகள் நடக்க துவங்கினால் மாணவர்கள் அமர இடம் இருக்காது. ஆண்டுக்காண்டு மாணவர் சேர்க்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதல் வகுப்பறை கட்டிட வசதி இல்லாததால் இடநெருக்கடியால் அவதிப்படும் நிலை உள்ளது. எனவே கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள், கூடுதலாக கழிவறைகளையும் கட்டவேண்டும் என்றனர்.

Related Stories:

>