×

திருவெற்றியூர் ஊராட்சிக்கு பேட்டரி குப்பை வண்டி வழங்கப்படுமா? தூய்மை தொழிலாளர்கள் எதிர்பார்ப்பு

திருவாடானை, பிப்.19: பிரசித்தி பெற்ற கோயில் இருப்பதால் திருவெற்றியூர் ஊராட்சிக்கு பேட்டரியால் செயல்படும் குப்பை வண்டி வழங்க வேண்டுமென தூய்மை தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாடானை அருகே உள்ள திருவெற்றியூரில் பிரசித்திபெற்ற பாகம்பிரியாள் கோயில் உள்ளது இக்கோயிலுக்கு தினமும் நூற்றுக்கணக்கான வெளியூர் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். செவ்வாய், வெள்ளி கிழமைகளில் ஆயிரக்கணக்கானோர் வந்து தங்கி சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். மேலும் ராமேஸ்வரம் சுற்றுலா வரும் பக்தர்களும் இவ்வழியாக வந்து பாகம்பிரியாள் அம்மனை தரிசித்து செல்கின்றனர். இதனால் கோயிலைச் சுற்றி நான்கு வீதிகளிலும் நூற்றுக்கணக்கான கடைகள் உள்ளன. எப்போதும் வெளியூர் பக்தர்கள் வந்து செல்வதால் நகர் பகுதி போன்றே இருக்கும். ஓட்டல்கள், டீக்கடைகள், பேன்சி கடைகள், தேங்காய் பழக்கடைகள் என அனைத்து கடைகளும் உள்ளதாலும் கோயிலில் அன்னதானம் நடைபெறுவதாலும் பக்தர்கள் சாப்பிடும் இலைகள் மற்றும் கடைகளில் தூக்கி எறியப்படும் குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகள் என அதிகளவில் குப்பை சேரும்.

இந்த குப்பைகளை ஊராட்சி நிர்வாக துப்புரவு தொழிலாளர்கள் தள்ளுவண்டியில் அள்ளி செல்கின்றனர். இரண்டு கிலோமீட்டர் தொலைவில் சென்று குப்பைகளை கொட்ட வேண்டிய நிலை உள்ளது. இங்குள்ள தூய்மை தொழிலாளர்கள் பெண் தொழிலாளர்களாகவும் வயதானவர்களும் இருப்பதால் குப்பை வண்டியை இழுக்க முடியாமல் கோயிலுக்கு அருகிலேயே சிலநேரம் கொட்டி விடுகின்றனர். இதனால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. இதுகுறித்து திருவெற்றியூர் கிராமமக்கள் கூறுகையில், ‘‘அதிக அளவு மக்கள் வந்து செல்லும் இந்த ஊருக்கு பேட்டரியால் இயங்கும் இரண்டு குப்பை வண்டிகளை மாவட்ட நிர்வாகம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது குப்பை வண்டிகளை இழுக்க போதுமான ஆட்கள் கிடைக்கவில்லை. இதனால் இங்கு சேரும் குப்பைகளை அங்கேயே கொட்டி தீ வைத்து கொளுத்துகின்றனர். இதில் ஏற்படும் புகையால் குடியிருப்புவாசிகள், கோயிலுக்கு வரும் பக்தர்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே சிறப்பு நிதி ஒதுக்கி பேட்டரியால் இயங்கும் குப்பை வண்டியை வழங்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறிய ஊராட்சி என்பதால் டிராக்டர் மற்றும் பவர் டில்லர் போன்றவை வாங்க அரசு விதிகள் இடம் கொடுக்காவிட்டாலும் இப்போது புதிதாக வந்துள்ள பேட்டரி குப்பை வண்டிகளை வழங்க வேண்டும்’’ என்றனர்.

Tags : Tiruvetriyur ,cleaning workers ,
× RELATED சுவற்றில் இயற்கை காட்சிகள் 525 தொழிலாளர்கள் பணி நீக்கம் கூடாது