கமுதி அருகே பரபரப்பு போலீஸ் எஸ்ஐ.யை கீழே தள்ளிவிட்டு காரில் மணல் கடத்திய 5 பேர் கைது

கமுதி, பிப்.19:  கமுதி அருகே காரில் மணல் கடத்திய 5 பேரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். கமுதி அருகே மண்டல மாணிக்கத்தை சேர்ந்த இருள்ராஜ்(22), நல்லீஸ்வரன்(22), கருத்தாமலை(22), அழகர்சாமி(19), அரிகிருஷ்ணன்(23) ஆகிய 5 பேரும் நேற்று காலை அப்பகுதியில் இருந்து கார் ஒன்றில் 25 மணல் மூட்டைகளை கடத்தி அருப்புக்கோட்டை சாலையில்  கிளாமரம் அருகே சென்று கொண்டிருந்தனர். அப்போது குற்றப் பிரிவு சிறப்பு சார்பு ஆய்வாளர் சகாதேவன் தலைமையில் போலீசார்  வாகன சோதனை நடத்தினர். காரில் ஏராளமான மணல் மூடைகள் கடத்தியது தெரியவந்தது. இதற்கு முறையான ஆவணங்கள் உள்ளதா என்று போலீசார் கேட்டுள்ளனர். காரில் வந்தவர்களுக்கும் போலீசாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது சார்பு ஆய்வாளர் சகாதேவனை, தகாத வார்த்தையில் பேசி, அவரை கீழே தள்ளி விட்டு காரில் தப்பிச் சென்றனர். விரட்டிச் சென்ற போலீசார்  அவர்களை மடக்கிப் பிடித்தனர். இதுகுறித்து கமுதி போலீசார் வழக்குப்பதிவு செய்து காரை பறிமுதல் செய்து 5 பேரை கைது செய்தனர். காயமடைந்த சார்பு ஆய்வாளர் கமுதி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Related Stories: