பாஸ்டேக் அமல்படுத்தப்பட்டதால் ராஜபாளையம் செல்லும் அரசு பஸ்கள் டோல்கேட்டை கடப்பதில் சிக்கல்

திருமங்கலம், பிப்.19: நான்கு வழிச்சாலை டோல்கேட்டுகளில் பாஸ்டேக் முறை கட்டாயம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன் காரணமாக கடந்த சில தினங்களாக மதுரை மாவட்டம் கப்பலூர் டோல்கேட்டினை கடந்து செல்வதில் அரசு பஸ்களுக்கு சிக்கல் எழுந்துள்ளது. மதுரையிலிருந்து விருதுநகர் சிவகாசி, நெல்லை, நாகர்கோவில் செல்லும் அரசு பஸ்கள் நான்கு வழிச்சாலையை கடந்து நீண்ட தூரம் செல்வதால் இவற்றிக்கு போக்குவரத்து கழகங்கள் பாஸ்டேக் முறையில் டோல்கேட் கட்டணம் செலுத்தியுள்ளன. அதே நேரத்திலிருந்து மதுரையிலிருந்து ராஜபாளையம், சங்கரன்கோவில், தென்காசி, செங்கோட்டை, பாபநாசம் செல்லும் அரசுபஸ்கள் கப்பலூர் டோல்கேட் வழியாக சுமார் ஒரு கி.மீ தூரமே பயணம் செய்கின்றனர். அதன்பின்பு திருமங்கலம் நகர் வந்து திருமங்கலம் கொல்லம் தேசிய நெடுஞ்சாலை (இருவழிச்சாலையை) பயன்படுத்துகின்றன. இதன் காரணமாக ராஜபாளையம் வழியாக செல்லும் அரசு பஸ்களுக்கு மதுரை கோட்டம் சார்பில் பாஸ்டேக் கட்டணம் செலுத்தவில்லை. இதன் காரணமாக நேற்று முதல் டோல்கேட்டினை கடப்பதில் ராஜபாளையம் மார்க்க அரசு பஸ்களுக்கு சிக்கல் எழுந்தது. பாஸ்டேக் முறையில் கட்டணம் செலுத்தாததால் நேற்று காலை கப்பலூர் டோல்கேட்டினை கடந்து செல்ல முயன்ற ராஜபாளையம், செங்கோட்டை உள்ளிட்ட அரசு பஸ்களை டோல்கேட் ஊழியர்கள் தடுத்து நிறுத்தினர். இதனால் போக்குவரத்து கழக ஊழியர்கள், பயணிகள் டோல்கேட் ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து நேற்று காலை 8 மணிமுதல் மதுரையிலிருந்து ராஜபாளையம் வழியாக செல்லும் மதுரை கோட்ட அரசு பஸ்கள் அனைத்தும் ரிங்ரோட்டில் வந்து திருமங்கலம் விமான நிலைய சாலையில் திருமங்கலத்திற்கு வந்தனர். ஆலங்குளம், சுங்குராம்பட்டி, கற்பக நகர் வழியாக வந்த அரசு பஸ்கள் இந்த வழித்தடத்தில் உள்ள ரயில்வே கேட்டில் அடிக்கடி மாட்டியதால் காலதாமதம் ஏற்பட்டது.

ரயில்வே கேட்டினை கடந்து மீண்டும் மதுரை ரோட்டில் சென்று திருமங்கலம் வெளியூர் பஸ் ஸ்டாண்டை அடைந்து பயணிகளை ஏற்றி கொண்டு ராஜபாளையம் சென்றன. இதனால் மதுரையிலிருந்து திருமங்கலத்தை கடந்து செல்லவே ராஜபாளையம் அரசு பஸ்களுக்கு ஒன்றை மணி நேரம் ஆனது. இதனால் பயணிகள் கடும் சிரமத்திற்குள்ளாகினர். இதுகுறித்து போக்குவரத்து ஊழியர்களிடம் கேட்டபோது, ‘‘ராஜபாளையம் மார்க்கத்தில் செல்லும் அரசு பஸ்கள் கப்பலூர் வழியாக செல்லும் நான்கு வழிச்சாலையை ஒரு கி.மீ தூரமே பயன்படுத்துகின்றன. இதற்கு டோல்கேட்டினை கடக்க ஒரு சிங்கில் டிரிப்பிற்கு 300 ரூபாய் பாஸ்டேக் கட்டணம் செலுத்தவேண்டும் என டோல்கேட்டில் நிர்ப்பந்தம் செய்கின்றனர்.

ஏற்கனவே நஷ்டத்தில் ஓடிக்கொண்டிருக்கும் போக்குவரத்து கழகத்திற்கு இது மேலும் நஷ்டத்தை உண்டாக்கும் நிலையை உருவாக்கியுள்ளது. எனவே ராஜபாளையம் வழியாக செங்கோட்டை, பாபநாசம், தென்காசி, சங்கரன்கோயில் செல்லும் அரசு பஸ்கள் திருமங்கலம் மதுரை விமான நிலையம் சாலை வழியாக திருமங்கலத்தை சென்று வருகிறோம். இதேபோல் ராஜபாளையத்திலிருந்து மதுரை வரும் போதும் திருமங்கலம் விமான நிலைய சாலை வழியாகவே மாட்டுதாவணிக்கு செல்கிறோம் என்றனர்.

Related Stories:

>