×

தனியார் தோட்டத்திற்கு அரசு செலவில் தார்சாலை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு பணிகள் தற்காலிகமாக நிறுத்தம்

அலங்காநல்லூர், பிப்.19: அலங்காநல்லூர் அருகே நடுப்பட்டி கிராமத்தில் தனியார் தோட்டத்திற்கு செல்ல தார்ச்சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதனை கிராம பொதுமக்கள் தடுத்து நிறுத்தி, பொது பயன்பாட்டிற்கும் இந்த கிராமத்திற்கு சொந்தமான கன்னிமார் கோவில் வரை இந்தச் சாலையை விரிவுபடுத்தி அமைக்க வேண்டும் என்று கூறி தார்ச்சாலை அமைக்கும் பணிக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று உசிலம்பட்டி கோட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் இந்த பகுதியில் வந்து தார்ச்சாலை அமைக்கும் பணி நெடுஞ்சாலைகள் மேம்பாட்டு நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த பணியை பொதுமக்கள் தடுக்காமல் தார்ச்சாலை அமைப்பதற்கான வேலையை தொடர விடுமாறு பொதுமக்களுக்கு கோரிக்கை விடுத்தனர்.

இதனை ஏற்றுக்கொள்ளாத பொதுமக்கள், கிராம மக்களுடைய பொது பயன்பாட்டிற்காக சாலை அமைக்க வேண்டுமே தவிர, தனிநபரின் தேவைக்காக விவசாய நிலத்திற்கு செல்லும் வகையில் தார்ச்சாலை அமைக்கும் பணியை அரசு செலவில் செய்யக் கூடாது. இதற்கு நெடுஞ்சாலை துறை மற்றும் ஒன்றிய அதிகாரிகளும் துணை போகாமல் கன்னிமார் கோவில் வரை சாலை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது, ஏற்கனவே அரசு நிதி ஒரு பகுதிக்கு என்று ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதனை மேற்கொண்டு விரிவுபடுத்துவதற்கு புதிதாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். எனவே தற்போது ஒதுக்கிய நிதியை பயன்படுத்தி தார்சாலை அமைப்பதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தரவேண்டும். அதற்கு பொதுமக்கள் மறுப்பு தெரிவித்ததால் இந்த சாலை அமைக்கும் பணி தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்றனர்.

Tags : garden ,
× RELATED உதகை தாவரவியல் பூங்கா புல்தரை 2 வாரங்களுக்கு மூடல்..!!