×

இறந்தவர் உடலுடன் விஏஓ அலுவலகம் முன் தர்ணா பழநியில் பரபரப்பு

பழநி, பிப். 19: பழநியில் மயானத்திற்கு செல்ல சான்று தர மறுக்கப்பட்டதால் இறந்தவர் உடலுடன் உறவினர்கள் விஏஓ அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பழநி டவுன், இந்திரா நகரை சேர்ந்தவர் தன்னாசி (65). பழநி நகராட்சியில் தூய்மை பணியாளராக பணிபுரிந்து ஓய்வுபெற்றவர். நீண்ட நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த இவர், நேற்று அதிகாலை உயிரிழந்தார். பழநியில் மாரியம்மன் கோயில் திருவிழா நடைபெறுவதால் இறந்தவர்கள் உடலை உடனடியாக எடுக்க வேண்டிய சம்பிராதாயம் உள்ளது. ஆனால் நேற்று பழநி புறநகர், சிவகிரிப்பட்டி எரிவாயு மயானத்தில் அதிகளவு உடல்களை எரிக்க புக்காகி இருந்தது. இதனால் தன்னாசியின் உடலை திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் உள்ள மின்மயானத்தில் எரிக்க முடிவு செய்து, அதற்கு மாலை 5 மணிக்கு நேரம் ஒதுக்கி தரப்பட்டிருந்தது. மருத்துவமனையில் இறந்தால் மருத்துவ சான்றும், வீடுகளில் இருந்தால் இயற்கை மரணம் என விஏஓ சான்றும் மயானத்தில் வழங்க வேண்டும். தன்னாசிக்கான சான்று வாங்குவதற்கு அவரது உறவினர்கள் பழநி டவுன் விஏஓ அலுவலகத்திற்கு சென்றுள்ளனர்.

அங்கு விஏஓவாக ரமணி என்பவர் நேற்று மாலை வரை சான்று வழங்கவில்லை என கூறப்படுகிறது. நேரத்திற்கு செல்லாததால் தாராபுரம் மின்மயானத்தில் எரிக்க முடியாதென நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த தன்னாசியின் உறவினர்கள் முன்னாள் கவுன்சிலர் குணசேகரன் தலைமையில் உடலை எடுத்து வந்து பழநி விஏஓ அலுவலகம் முன்பு வைத்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.தகவலறிந்ததும் போலீசார், வருவாய்த்துறையினர் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் பழநி எரிவாயு மின் மயானத்திலேயே உடலை எரிக்க ஏற்பாடு செய்வதாக கூறி சமரசம் செய்தனர். அதன்பிறகே போராட்டத்தை கைவிட்டு உடலை மயானத்திற்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு 2 உடல்கள் எரித்த பின்புதான், தன்னாசியின் உடலை எரிக்க முடியும் என்று மயான அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். இதன்பின், வேறுவழியின்றி சுமார் 3 மணி நேரம் காத்திருந்து தன்னாசியின் உடலை அவரது உறவினர்கள் தகனம் செய்தனர். இச்சம்பவம் பழநி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : office ,Tarna Palani ,VAO ,
× RELATED பெரம்பலூர் மாவட்ட எல்லைக்குள் சிறுத்தை: தவறான தகவல்