×

தாம்பரம் நகராட்சி நிர்வாகம் அலட்சியத்தால் நிரம்பி வழியும் குப்பை கிடங்கு: நோய் பாதிப்பில் தவிக்கும் மக்கள்

தாம்பரம்: தாம்பரம் நகராட்சியில் மொத்தம் 39 வார்டுகள் உள்ளன. இதில், 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து தினமும் சேகரிக்கப்படும் சுமார் 100 டன் குப்பை கழிவுகள் மேற்கு தாம்பரம் கன்னடபாளையம் பகுதியிலுள்ள நகராட்சிக்கு சொந்தமான கிடங்கில் கொட்டப்படுகிறது. பல ஆண்டுகளாக இங்கு கொட்டப்பட்ட குப்பை மலை போல் குவிந்துள்ளதுடன், மேலும் அங்கு குப்பை கொட்ட இடமில்லாததால் மாநகராட்சி அனுமதி பெற்று சில மாதங்களாக கொடுங்கையூர் குப்பை கிடங்கிற்கு கொண்டு சென்று கொட்டப்பட்டது. இவ்வாறு கொடுங்கையூர் கிடங்கில் குப்பை கொட்டுவதற்கு ஒரு டன்னுக்கு 2,500 வீதம் மாநகராட்சி நிர்ணயித்துள்ளது. தாம்பரம் நகராட்சி சார்பில் அந்த கட்டணத்தை செலுத்தி தினமும் 50 முதல் 60 டன் குப்பை கொடுங்கையூர் கிடங்கில் கொட்டப்பட்டு வந்தது.

இந்நிலையில், நகராட்சி சுகாதார ஆய்வாளர் சாமுவேல் சரிவர பணிக்கு வராததால், தாம்பரம் பகுதியில் தினசரி குப்பையை சுத்தம் செய்யும் பணி முறையாக நடைபெறுவதில்லை. அவ்வப்போது அகற்றப்படும் குப்பையும் கொடுங்கையூர் கிடங்கிற்கு கொண்டு செல்லப்படாமல், கன்னடப்பாளையத்தில் உள்ள நகராட்சி கிடங்கில் கொட்டப்படுகிறது. அங்கு ஏற்கனவே இடம் இல்லாத நிலையில் மேலும் மேலும் குப்பை கொட்டப்படுவதால், கிடங்கு வளாகத்தில் திடக்கழிவு மேலாண்மை பணிக்காக அமைக்கப்பட்ட கட்டிடங்கள் மூழ்கும் அளவிற்கு குப்பை குவிக்கப்பட்டுள்ளது. இதனால், கடும் துர்நாற்றம் வீசுவதுடன், கொசு உற்பத்தி அதிகரித்து சுற்றுப்பகுதி மக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது.

எனவே, இங்கு குப்பை கொட்டக்கூடாது, இங்குள்ள குப்பையை அகற்ற வேண்டும் என இப்பகுதி மக்கள் தாம்பரம் நகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை. இதே நிலை நீடித்தால் சுற்றுப் பகுதி மக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, கன்னடப்பாளையம் கிடங்கில் மலைபோல் குவிந்துள்ள குப்பையை அகற்ற வேண்டும், என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Tags :
× RELATED கிண்டி கத்திப்பாரா சந்திப்பில் விமான...