தேர்தல் முன்விரோதம் காரணமாக பொய் வழக்கில் திமுக ஊராட்சி தலைவரை கைது செய்ய முயற்சி: கமிஷனர் அலுவலகத்தில் மா.சுப்பிரமணியன் புகார்

சென்னை: சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், அயப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் துரைவீரமணி மனைவி கனிமொழி சார்பில் சைதாப்பேட்டை எம்எல்ஏ மா.சுப்பிரமணியன் நேற்று கொடுத்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:

எனது கணவர் துரைவீரமணி வில்லிவாக்கம் ஒன்றிய திமுக செயலாளராக உள்ளார். நடந்து முடிந்த உள்ளாட்சி மன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். எனது கணவரை எதிர்த்து போட்டியிட்ட எம்.எம்.மூர்த்தி தோல்வியடைந்தார். இந்நிலையில், கடந்த 8ம் தேதி அயப்பாக்கம் அரசினர் மேல்நிலைப்பள்ளி தெரு, செல்வி மஹால் அருகில் எம்.எம்.மூர்த்திக்கும் ஏற்கனவே அவரோடு நெருங்கிய தொடர்புடைய நபர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு ஒருவருக்கொருவர் வெட்டிக்கொண்டனர்.

இதுதொடர்பாக எனது கணவர் மீது எம்.எம்.மூர்த்தி புகார் அளித்துள்ளார். அதன்படி திருமுல்லைவாயில் காவல் நிலையத்தில் எனது கணவர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அரசியல் மற்றும் தேர்தல் காழ்ப்புணர்ச்சி காரணமாக எனது கணவரை கைது செய்யும் நோக்கில் இந்த வழக்கில் அவர் சேர்க்கப்பட்டுள்ளார். எனவே பொய் வழக்கில் சிக்க வைத்துள்ள எம்.எம்.மூர்த்தி மீது உரிய நடவடிக்கை எடுத்து, போலீசார் முழுமையாக விசாரிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>