×

பதிவுத்துறை ஆன்லைனில் தொடரும் குளறுபடி வில்லங்க சான்றிதழ், பத்திர நகல் விண்ணப்பிக்க முடியாமல் மக்கள் கடும் அவதி

திருப்போரூர்: பதிவுத்துறை ஆன்லைனில் தொடரும் குளறுபடியால், பொதுமக்கள் வில்லங்க சான்றிதழ், பத்திர நகல் விண்ணப்பிக்க முடியாமல் கடும் அவதியடைந்து வருகின்றனர். தமிழகம் முழுவதும் 575க்கும் மேற்பட்ட பத்திரப் பதிவு அலுவலகங்கள் செயல்படுகின்றன. இங்கு சொத்துக்களை கிரையம் வாங்குதல், அடமானம், வங்கிக்கடன், உயில், செட்டில்மென்ட் ஆகிய ஆவணங்கள் பதிவு செய்யப்படுகின்றன. தமிழக அரசுக்கு அதிக வருவாய் அளிக்கும் துறைகளில் ஒன்றாக விளங்கும் பதிவுத்துறை முழுவதும் ஆன்லைன் மயமாக்கும் பணி கடந்த சில ஆண்டுளுக்கு முன் தொடங்கி, 2018ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் ஆன்லைன் முறை அமல்படுத்தப்பட்டது. ஆனால், தொடர்ச்சியாக சர்வர் கோளாறு, மென்பொருள் மேம்படுத்தல் உள்பட பல்வேறு காரணங்களால் அடிக்கடி ஆன்லைன் பத்திரப்பதிவில் சிக்கல் எழுந்தாலும், 2 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த நடைமுறை பயன்படுத்தப்பட்டு விட்டது.

இந்நிலையில் கடந்த 1 மாதமாக பொது மக்கள் வில்லங்க சான்றிதழ் மற்றும் சான்றிட்ட நகல் ஆகியவற்றை பெறுவதில் மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மென்பொருள் மேம்படுத்துதலில் ஏற்பட்ட கோளாறு காரணமாக கடந்த வருடம் மனு செய்தவர்களுக்கு கூட தற்போது மீண்டும் சான்றிட்ட நகல்கள் அனுப்பப்பட்டு வருகின்றன. ஆனால், புதிதாக மனு செய்தவர்கள் கேட்கும் சான்றிட்ட நகல்களை அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 10க்கும் மேற்பட்ட சார்பதிவகங்களில் ஆன்லைனில் விண்ணப்பித்து சான்றிட்ட நகல்களை பெற முடியாமல், பொதுமக்கள் பலரும் அவதியடைந்துள்ளனர். இதுகுறித்து சார்பதிவாளர் அலுவலகங்களில் கேட்டபோது, இந்த கோளாறு சம்பந்தமாக இந்த வலைதளத்தை பராமரிக்கும் தனியார் நிறுவனத்துக்கு மின்அஞ்சல் அனுப்பிவிட்டோம். 15 நாட்களாகியும் கோளாறு சரி செய்யவில்லை. விரைவில் நிலைமை சீராகும் என எதிர்பார்க்கிறோம் என்றனர்.

Tags :
× RELATED கிண்டி கத்திப்பாரா சந்திப்பில் விமான...