காஸ் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு தீயில் சிக்கி தனியார் ஊழியர் படுகாயம்

குன்றத்தூர்: டீ போடுவதற்காக காஸ் அடுப்பை பற்ற வைத்தபோது, தனியார் நிறுவன ஊழியர் தீப்பிடித்து படுகாயமடைந்தார். மாங்காடு அடுத்த மதனந்தபுரம், மகாலிங்கம் தெருவை சேர்ந்தவர் முருகேசன் (60). தனியார் நிறுவன ஊழியர். நேற்று அதிகாலை முருகேசன், தனது வீட்டில் டீ போடுவதற்காக சமையலறைக்கு சென்றார். அங்கு, சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு, சமையலறை முழுவதும் காஸ் பரவியது. இதை அறியாமல், அவர் டீ போடுவதற்காக ஸ்டவ்வை பற்ற வைத்தார். இதில், திடீரென  தீப்பற்றியது. அவரது உடலில் பற்றிய தீ, வீடு முழுவதும் பரவியது. இதனால் அவர் அலறி துடித்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம், பக்கத்தினர், உடனடியாக அவரை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதற்கிடையில், விருகம்பாக்கம்  தீயணைப்பு நிலையத்தில் இருந்து வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதனால் தீ அருகில் உள்ள மற்ற வீடுகளுக்கும் பரவாமல் தடுக்கப்பட்டது. இந்த தீ விபத்தில் முருகேசன் வீட்டில் இருந்த டிவி, பிரிட்ஜ், மிக்சி, வாஷிங் மெஷின் உள்பட அனைத்து பொருட்களும் எரிந்து நாசமாயின. புகாரின்படி மாங்காடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Related Stories: