×

தர்மபுரி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பெண்கள் மட்டுமே வடம் பிடித்து இழுத்த தேரோட்டம்

தர்மபுரி, ஏப்.2: பங்குனி உத்திரத்தையொட்டி, தர்மபுரியில் உள்ள முருகன் கோயிலில் நேற்று தேரோட்டம் நடந்தது. இதில் பெண்கள் மட்டும் வடம் பிடித்து தேரை இழுத்தனர். தர்மபுரி அன்னசாகரத்தில் உள்ள சிவசுப்பிரமணிய சுவாமி கோயிலில், கடந்த மாதம் 25ம் தேதி பங்குனி உத்திர திருவிழா தொடங்கியது. விழாவையொட்டி தினமும் சிறப்பு பூஜைகள், சுவாமி வீதியுலா நடைபெற்று வந்தது. பங்குனி உத்திரமான நேற்று சிவசுப்பிரமணியசாமி, வள்ளி, தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

பிறகு அலங்கரிக்கப்பட்ட தேரில், பெண்கள் மட்டுமே பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர். இதில் தர்மபுரி, அன்னசாகரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர். தேரோட்டத்தையொட்டி, தர்மபுரி டவுன் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

கடத்தூர்:கடத்தூர் அருகே உள்ள அஸ்தகிரியூர் கந்தர்மலை முருகன் கோயிலில், பங்குனி உத்திர விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து பக்தர்கள் காவடி எடுத்து, பால்குடம் சுமந்து, அழகு குத்தி ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவில் அஸ்தகிரியூர், கடத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

Tags : Dharmapuri Subramania Swamy Temple ,Dharmapuri ,Murugan Temple ,Panguni Utthira ,Sivasubramania Swamy Temple ,Dharmapuri Annasagaram ,
× RELATED அனுமதியின்றி மஞ்சுவிரட்டு 5 பேர் மீது வழக்குப்பதிவு