×

கடம்பத்தூர் ரயில் நிலையம் அருகே கிடப்பில் போடப்பட்ட சுரங்கப்பாதை பணி

திருவள்ளூர், ஏப்.2: கடம்பத்தூர் ரயில் நிலையம் சுரங்கப்பாதை பணியானது கிடப்பில் போடப்பட்டுள்ளதால், ரயில் பயணிகள் ஆபத்தை உணராமல் தண்டவாளத்தை கடந்தும், நுழைந்தும் செல்வதால், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, அப்பணியை விரைந்து முடிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை எழுந்துள்ளது. திருவள்ளூர் மற்றும் கடம்பத்தூர் ரயில் நிலையங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் திருவள்ளூர், அரக்கோணம் மற்றும் சென்னை மார்க்கத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். இந்த, ரயில் நிலையம் வழியாக புறநகர் ரயில்கள், விரைவு ரயில்கள், அதிவிரைவு ரயில்கள் சென்று வருகின்றன. ஒவ்வொரு ரயில் செல்லும்போதும் கடம்பத்தூர் ரயில் நிலையத்தில் ரயில்வே இருப்புப்பாதை கேட் மூடப்படுவதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வந்தனர்.

இதனையடுத்து, பொதுமக்களின் வேண்டுகோளை ஏற்று ரூ.14.5 கோடி மதிப்பில் ரயில்வே மேம்பாலம் கட்டும் பணி 2015ல் துவங்கி 2022ம் ஆண்டில் பயன்பாட்டிற்கு வந்தது. இந்த, மேம்பாலம் வழியாக தினமும் புதுமாவிலங்கை, அகரம், சத்தரை, பேரம்பாக்கம், இருளஞ்சேரி, கூவம், குமாரச்சேரி, கீழச்சேரி, மப்பேடு, சிற்றம்பாக்கம், நரசிங்கபுரம், களாம்பாக்கம், போன்ற சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள், மருத்துவமனைக்கு செல்பவர்கள் என தினமும் ஆயிரக்கணக்கானோர் பயணித்து வருகின்றனர். இதனால், இந்த கடம்பத்தூர் ரயில் நிலையத்தில் பொதுமக்கள் பாதுகாப்பாக செல்ல நடை மேம்பாலத்தை முறையாக அமைத்து தராததால் யாரும் இந்த நடை மேம்பாலத்தை பயன்படுத்துவதில்லை. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் ஆபத்தான முறையில் ரயில்வே தண்டவாளத்தை கடந்து செல்கின்றனர்.

எனவே, கடம்பத்தூர் ரயில் நிலையத்தில் சுரங்கப்பாதை அமைத்து தரவேண்டும் என பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வந்தனர். இந்த, கோரிக்கையை ஏற்று கடம்பத்தூர் ரயில் நிலையத்தில் கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் ரூ.5.50 கோடி மதிப்பீட்டில் 300 அடி நீளம் 16 அடி அகலம் 9 அடி உயரத்தில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி துவங்கப்பட்டது. 6 மாதத்தில் முடிக்க திட்டமிட்டதாக கூறப்பட்ட இப்பணி, தற்போது கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால், அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் கடம்பத்தூர் ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகள் ஆபத்தை உணராமல் தண்டவாளத்தை கடந்து செல்லும்போது, ரயில் மோதி உயிரிழந்து வரும் சம்பவமும் தொடர்ந்து வருகிறது.

குறிப்பாக, இந்த கடம்பத்தூர் ரயில் நிலையத்தில் சரக்கு ரயில்களை அடிக்கடி நிறுத்தி வைப்பதால், ரயில் பயணிகள் மட்டுமின்றி பொதுமக்களும் ஆபத்தை உணராமல் அதில் நுழைந்து செல்லும் போது சிரமப்படுவதோடு ரயில் தண்டவாளத்தை கடக்கும்போது விபத்தில் சிக்கி உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறது. எனவே, கடம்பத்தூர் ரயில் நிலையத்தில் ரயில்வே சுரங்கப்பாதை அமைக்கும் பணியை உடனடியாக ரயில்வே துறை அதிகாரிகள் முடிக்க வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர். தண்டவாளத்தை கடக்கும்போது எப்போதெல்லாம் ரயிலில் விபத்தில் சிக்கி உயிர்ச்சேதம் ஏற்படுகிறதோ, அப்பொழுதெல்லாம் ரயில்வே சுரங்கப்பாதைக்கான பணிகளுக்கு பூஜை போடுவதும், பின்னர் அந்த பணிகள் கிடப்பில் போடுவதும் தொடர் கதையாகி வருகிறது. ரயில்வே துறை அதிகாரிகள், பொதுமக்களின் உயிர் மீது கரிசனம் காட்டி, கிடப்பில் போடப்பட்ட கடம்பத்தூர் ரயில் நிலைய சுரங்கப்பாதையை உடனடியாக விரைந்து முடிக்க பொதுமக்களும், ரயில் பயணிகளும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Kadambattur railway station ,Thiruvallur ,Kadambattur railway ,
× RELATED பாலியல் சீண்டல் பொய்யானது என தவெக...