டாஸ்மாக்கை உடைத்து உள்ளே சென்றபோது பணம் இல்லாததால் மதுபாட்டில்களை அள்ளி சென்ற மர்ம நபர்கள்: பள்ளிப்பட்டு அருகே பரபரப்பு

பள்ளிப்பட்டு: பள்ளிப்பட்டு அருகே டாஸ்மாக் கடையை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, அங்கு பணம் இல்லாததால், மதுபாட்டில்களை மர்ம ஆசாமிகள் அள்ளி சென்றுள்ளனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பள்ளிப்பட்டு அருகே பொதட்டூர்பேட்டை - காவேரிராஜபேட்டை சாலையில்  அமைந்துள்ள லுங்கி பாவு மில்லில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த வேனை மர்ம கும்பல் நேற்று முன் தினம் இரவு திருடியுள்ளனர். பின்னர், அருகில் இருந்த 2 டாஸ்மாக் கடைகளின் பூட்டை உடைத்து பீரோவை திறந்து  பார்த்தனர். அப்போது, அதில் பணம் இல்லாததால், மதுக்கடையில் ஆர அமர்ந்து  மது அருந்தி விட்டு  கூடவே பீர், பிராந்தி பாட்டில்கள் அள்ளிச் சென்றுள்ளனர். போதை அதிகரித்ததில் சொரக்காய்ப்பேட்டை ஏரிக்கரை பகுதியில் சென்றபோது வேன் மின் கம்பம் மீது மோதி குப்புற கவிழ்ந்தது.

விபத்தை பார்த்த ஏரிக்கரை பகுதியில் உறங்கிக்  கொண்டிருந்த வாத்து மேய்ப்பவர் ஓடி சென்று உதவ முயன்றார். அப்போது, அவரையும் அடித்து உதைத்து அவரிடமிருந்த செல்போன் திருடிக்கொண்டு கீளப்பூடியில் வீடுகளில் கொள்ளை அடிக்க முயன்றபோது பொதுமக்கள் விரட்டினர். இருப்பினும்  பலே திருடர்கள்  பறந்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அங்குள்ள லுங்கி கம்பெனியில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவை பார்த்தனர். அப்போது, 3 பேர் முகமூடி அணிந்து கொண்டு  வேன் கடத்திக்கொண்டு செல்வது தெரியவந்தது.  பொதட்டூர்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

Related Stories:

>