×

(தி.மலை) சீட்டு பணம் மீட்டு தரக்கோரி காவல் நிலையம் முற்றுகை ஆரணியில் 4வது முறையாக பரபரப்பு

ஆரணி, பிப்.18: ஆரணி சைதாப்பேட்டையை சேர்ந்தவர் அன்புவேல்(45). கடந்த 10 ஆண்டுகளாக மாத சீட்டு நடத்தி வந்தார். இவரிடம் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த 250க்கும் மேற்பட்டோர் சீட்டு பணம் கட்டி வந்தனர். இந்நிலையில், அன்புவேல் ₹2 கோடிக்கு மேல் சீட்டு கட்டியவர்களுக்கு திருப்பி தராமல் கடந்த 2 ஆண்டுகளாக அலைக்கழித்து வந்ததுடன், கடந்த சில மாதங்களுக்கு முன்பு திடீரென தலைமறைவானார். பாதிக்கப்பட்டவர்கள் பணத்தை மீட்டுத்தர கோரி எஸ்பி, ஆரணி டிஎஸ்பி மற்றும் போலீசாரிடம் புகார் அளித்தனர். புகார் மீது நடவடிக்கை எடுக்காததால் பாதிக்கப்பட்டவர்கள் ஏற்கனவே 3 முறை காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். பின்னர், அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரனிடமும் புகார் தெரிவித்தனர்.

இந்நிலையில், சீட்டு கட்டியவர்களுக்கு நேற்று பணத்தை பெற்று தருவதற்காக போலீசார் கூறியிருந்தனர். அதன்பேரில், அவர்கள் ஆரணி நகர காவல் நிலையம் சென்றனர். அப்போது போலீசார், இன்னும் 2 நாட்கள் கழித்து வருமாறு கூறியுள்ளனர். இதைக்கேட்டு ஆத்திரமடைந்தவர்கள் 4வது முறையாக நேற்றும் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசார், அன்புவேலுவை கண்டுபிடித்து காவல் நிலையம் கொண்டு வாங்க, பின்னர் நடவடிக்கை எடுக்கிறோம் என்று ஒருமையில் பேசி, அவர்களை மிரட்டி வெளியே அனுப்பினார்களாம். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் என்ன செய்வது என தெரியாமல் காவல் நிலையம் அருகே காத்திருந்து வேதனையுடன் திரும்பி சென்றனர். இதனால் அங்கு சுமார் 2 மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : T.Malai ,siege ,police station ,recovery ,
× RELATED கம்பம் போலீஸ் நிலையத்தில் அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்