×

விற்பனை ரசீது வழங்காததால் 3 உரக்கடைகளின் உரிமம் ரத்து ஆரணி அருகே அதிகாரிகள் அதிரடி

ஆரணி, பிப்.18: ஆரணி அருகே விற்பனை ரசீது வழங்காததால் 3 உரம் விற்பனை கடைகளின் உரிமத்தை அதிகாரிகள் அதிரடியாக ரத்து செய்தனர்.
ஆரணி பகுதிகளில் உள்ள உரம் விற்பனை கடைகளில், விவசாயிகள் வாங்கும் உரம், பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு முறையான ரசீது வழங்காமல், கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக வேளாண்மை இணை இயக்குனருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் முருகன் உத்தரவின்பேரில் வேளாண்மை உதவி இயக்குனர்(தகவல் மற்றும் தரக்கட்டுப்பாடு) விஜயக்குமார் தலைமையில் ஆரணி, மேற்கு ஆரணி வேளாண்மை அலுவலர்கள் பவித்ராதேவி, கீதா ஆகியோர் அடங்கிய குழுவினர் நேற்று உரம் விற்பனை கடைகளில் திடீர் ஆய்வு செய்தனர்.

அப்போது, அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதல் விலைக்கு உரம் விற்பனை செய்யப்படுகிறதா? உரங்களுக்கு முறையான விலை பட்டியல் ரசீது வழங்கப்படுகிறதா? உரம் இருப்பு விவரம், காலாவதியான உரம், பூச்சிக்கொல்லி மருந்துகள், தரமற்ற நெல் விதைகள் விற்பனை செய்யப்படுகிறதா? கடைகளில் ஆவணங்கள் முறையாக பராமரிக்கப்படுகிறதா? என அதிகாரிகள் அதிரடியாக ஆய்வு செய்தனர். இதில், ஆரணி அடுத்த இரும்பேடு, அரையாளம் பகுதிகளில், விவசாயிகள் வாங்கும் உரத்திற்கு முறையான விலை பட்டியல் மற்றும் ரசீது வழங்காமல் இருந்த 3 கடைகளின் உரம் விற்பனை உரிமத்தை ஒரு வாரத்துக்கு ரத்து செய்தனர்.

இதைத்தொடர்ந்து, தரமற்ற நெல் விதைகள், காலாவதியான உரம், பூச்சிக்கொல்லி மருந்துகளை விற்பனை செய்யக்கூடாது. அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதல் விலைக்கு உரம் விற்பனை செய்தால் விற்பனை உரிமம் ரத்து செய்யப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கேப்சன்... ஆரணி அடுத்த இரும்பேடு பகுதியில் உள்ள உரம் விற்பனை கடையில் வேளாண்மை உதவி இயக்குனர் விஜயகுமார் திடீர் ஆய்வு செய்தார். உடன் வேளாண்மை அலுவலர் பவித்ராதேவி.

Tags : Arani ,grocery stores ,
× RELATED 1,040 வாக்குச்சாவடிகளில் வெப்கேமரா...