×

பாசஞ்சர் ரயில்கள் எப்போது இயங்கும்? தெற்கு ரயில்வே பொதுமேலாளர் பேட்டி

நெல்லை, பிப். 18: பாசஞ்சர் ரயில் போக்குவரத்து தொடங்குவது குறித்து மத்திய ரயில்வே அமைச்சகம் முடிவு செய்து அறிவிக்கும் என நெல்லையில் தெற்கு ரயில்வே ெபாது மேலாளர் ஜான் தாமஸ் தெரிவித்தார். தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஜான்தாமஸ் நேற்று காலை கேரள மாநிலம் புனலூரில் இருந்து ஆய்வுப்பணியை மேற்கொண்டார். பாவூர்சத்திரம், கடையம், அம்பை உள்ளிட்ட ரயில் பாதைகளில் கடவு பாதைகள், வளைவுகள், பாலங்கள் போன்றவைகளை பார்வையிட்டு வேக சோதனை நடத்தினார்.

பிற்பகலில் நெல்லை வந்த அவர் மாலையில் நெல்லை ரயில் நிலையத்தில் பிட் லைன், பிளாட்பார்ம், யார்டு, ரயில்வே ஊழியர் குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளை ஆய்வு செய்தார். குடியிருப்பில் உள்ளவர்களிடமும், பயணிகளிடமும் குறைகள் ஏதும் உள்ளதா என கேட்டார். பின்னர் புதிய வாகன நிறுத்தப்பகுதி, கட்டண கழிப்பறை போன்றவைகளை திறந்து வைத்தார். தொடர்ந்து நடந்த நிகழ்ச்சியில் சிறந்த தொழிலாளர்கள், பணியாளர்களுக்கு விருதுகளை வழங்கி பாராட்டி பேசினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: புனலூரில் இருந்து நெல்லை வரையிலான ரயில் வழித்தடங்களை ஆய்வு செய்தேன். குறிப்பாக பயணிகளுக்கு உரிய வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அனைத்து பகுதிகளிலும் சிறந்த முறையில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. நெல்லை ரயில் நிலையத்தில் யார்டு உள்ளிட்ட அனைத்தும் நன்றாக பராமரிக்கப்படுகின்றன. இது தொடர வேண்டும்.

தமிழகத்தில் கொரோனா பரவல் வேகம் குறைந்துள்ள நிலையில் படிப்படியாக கூடுதல் வழித்தடங்களில் சிறப்பு விரைவு ரயில்கள் தற்போது இயக்கப்படுகின்றன. பாசஞ்சர் ரயில்களை இயக்குவது குறித்து முடிவு எடுக்கவில்லை. இதற்கு காரணம் கேரளாவில் கொரோனா பரவல் அதிகமாக உள்ளது. தமிழகத்தில் குறைந்தாலும் பூஜ்ஜியம் என்ற நிலைக்கு வரவில்லை. இங்குள்ள நிலை குறித்து மத்திய ரயில்வே அமைச்சகத்திற்கு தெரிவிக்கப்படும். அவர்கள் பாசஞ்சர் ரயில்களை இயக்குவது குறித்து முடிவு செய்து அறிவிப்பார்கள். குருவாயூர்- சென்னை- தூத்துக்குடி பகல்நேர லிங்க எக்ஸ்பிரஸ் ரயில் இயக்குவது குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags : General Manager ,Southern Railway ,
× RELATED சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு