×

அடுத்த முறை கடலுக்கு சென்று மீன் பிடிப்பேன் விவசாயிகளைப் போல மீனவர்களுக்கும் சலுகைகள் வழங்க வேண்டும் ராகுல்காந்தி வலியுறுத்தல்

புதுச்சேரி, பிப். 18: புதுச்சேரி வந்த காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி சோலை நகர் மீனவ கிராமத்தில் மீனவ மக்களுடன் கலந்துரையாடல் நடத்தினார். அப்போது அவர் பேசியதாவது: வீட்டில் இருந்து கிளம்பும்போது ஒருவித மனநிலையில் கிளம்பினேன். இங்கு வந்த பிறகு எனது சொந்த வீட்டுக்கு வந்தது போல் உணர்கிறேன். மீனவ சமுதாயத்தினரின் எண்ணங்கள் என்ன? எதிர்காலத்தில் என்ன செய்யலாம்? என உங்களின் கருத்துகளை அறிய இங்கு வந்திருக்கிறேன். மத்திய அரசு மக்களுக்கு எதிரான 3 சட்டங்களை நிறைவேற்றி இருக்கிறது. நாட்டின் முதுகெலும்பே விவசாயம்தான். நீங்களும் விவசாயிகள் போன்றவர்கள்தான். நீங்கள் கடலில் விவசாயம் செய்வதாக நான் கருதுகிறேன். மத்திய பாஜக அரசில் விவசாய துறைக்கென அமைச்சர் உள்ளார். அமைச்சகமும் உள்ளது. மீனவர்களுக்காக ஏன் அமைச்சர் நியமிக்கப்படவில்லை?  

விவசாயிகளுக்கு ஒரு பிரச்னை என்றால் அந்த துறை அமைச்சரை சந்திக்க முடிகிறது. மீனவர்களின் பிரச்னைகளுக்கு யாரை அணுகுவது? மத்திய அரசு மீனவர்களுக்கென அமைச்சரை நியமித்தால்தான், அவர்களின் பிரச்னைகள் குறித்து பேச முடியும்?  கடல் விவசாயிகள் ஏழை, பணக்காரன் என இரண்டு வகைகளில் உள்ளனர். சிறிய படகுகளில் சென்று மீன்பிடிப்பவர், பெரிய படகில் சென்று மீன் பிடிப்பவர் என வித்தியாசம் உள்ளது. எனவே மீனவர்களுக்கு சமமான அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்பதே எங்களின் நோக்கம். கடலில் சென்று மீன்பிடிப்பது கஷ்டம் நிறைந்த காரியம். இதனால் அரசு உங்களுக்கு பாதுகாப்பு கொடுப்பது அவசியம். விவசாயிகளுக்கு வழங்குவது போல் மீனவர்களுக்கும் சலுகைகள் வழங்கப்பட வேண்டும். ஓய்வூதியம், காப்பீடு, கடன் வசதி, டீசல் உள்ளிட்டவை வழங்கப்பட வேண்டும்.

மீன்பிடி பொருட்களை நவீனமானதாக வழங்க வேண்டும். இவ்வாறு பேசினார். இதை தொடர்ந்து ராகுல்காந்தியுடன் மீனவ சமுதாயத்தினர் கலந்துரையாடினர். அப்போது மாணவர்கள், பெண்கள், முதியவர்கள் என பலதரப்பினரும் பலவிதமான கேள்விகளை கேட்டனர். அவர்கள் அனைவருக்கும் ராகுல்காந்தி பதில் அளித்தார். அப்போது ஒருசிலர் ஆங்கிலத்தில் கேள்வி கேட்டனர். அதற்கு, நான் தமிழகத்திற்கு வந்திருக்கிறேன். தமிழ் ஒரு சிறந்த மொழி. எனவே நீங்கள் தமிழில்தான் கேள்வி கேட்க வேண்டும் என்றார்.

இதையடுத்து அனைவரும் தமிழில் கேள்வி கேட்டனர். இவற்றை முதல்வர் நாராயணசாமி ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். உரையாடலின்போது மீனவர்களுக்கு இடஒதுக்கீடு, பழங்குடியின பட்டியலில் சேர்ப்பது, வேலைவாய்ப்பு, இந்திய பொருளாதாரம், மின்னணு வாக்குப்பதிவு முறை உள்ளிட்ட விஷயங்கள் குறித்து மீனவ சமுதாயத்தினர் கேள்வி எழுப்பினர். இதற்கு ராகுல்காந்தி பதில் அளித்து பேசுகையில், மத்திய பாஜக அரசு சிறு மற்றும் குறுதொழில்களை நசுக்கி வருகிறது. அதற்கு பதிலாக பெருமுதலாளிகளுக்கு பல சலுகைகளை தருகிறார்கள். அவர்களுக்கு ஏக, போக உரிமைகளை வழங்குகிறார்கள். லட்சம் கோடி ரூபாய்களை கடனாக வழங்குகிறார்கள்.

சில பணமுதலைகள் கடல்வளத்தையும் அபகரிக்கிறார்கள். இவிஎம் மெஷின் இந்தியாவின் பெரும் பிரச்னையாக இருக்கிறது. கொரோனா காலகட்டத்தில் பல மாநில மக்கள் நடைபயணமாக தங்கள் சொந்த ஊருக்கு சென்றார்கள். அவர்களுக்கு இலவசமாக ஒரு பஸ், ரயில் டிக்கெட் தரக்கூட நாதியில்லை. ஏழைகள் பிரித்தாளப்படும் சூழல் நிலவுகிறது. ஏழை மக்கள் ஒன்றிணைந்து செயல்படுவதுதான் இதற்கு தீர்வு. பெரிய பெரிய அரசியல்வாதிகள் இங்கு வருவார்கள். அவர்கள் நினைப்பதைதான் உங்களிடம் பேசிவிட்டு போவார்கள். நான் நீங்கள் நினைப்பதை, உங்கள் கருத்துகளை கேட்பதற்காக வந்திருக்கிறேன். அடுத்த முறை வரும்போது உங்களுடன் படகில் கடலுக்குள் வந்து நீங்கள் மீன்பிடிப்பதை உடனிருந்து பார்ப்பேன். இவ்வாறு பேசினார்.

Tags : sea ,fishermen ,Rahul Gandhi ,
× RELATED விசாகப்பட்டினத்தில் பரபரப்பு...