உள்துறை அமைச்சர் அமித்ஷா அவசர அழைப்பு பாஜக நிர்வாகிகள் திடீர் டெல்லி பயணம்

புதுச்சேரி, பிப். 18:  உள்துறை அமைச்சர் அமித்ஷா அழைப்பின் பேரில்  பாஜக நிர்வாகிகள் அவசரமாக டெல்லி பயணம் சென்றுள்ளனர். அங்கு புதுச்சேரியின் அடுத்த கட்ட அரசியல் நகர்வுகள் குறித்து ஆலோசனை நடத்துகின்றனர். புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் அரசு தனது மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டுமென எதிர்க்கட்சிகள் நம்பிக்கை இல்லா தீர்மானம் கோரி கவர்னர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளனர். இதற்கிடையே துணை நிலை ஆளுநராக இருந்த கிரண்பேடி நீக்கம் செய்யப்பட்டு தெலங்கானா ஆளுநர் தமிழிசைக்கு புதுச்சேரி  பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.

புதிய துணை நிலை ஆளுநர் பொறுப்பேற்ற பிறகு எதிர்க்கட்சிகளின் மனு பரிசீலிக்கப்படும் என தெரியவருகிறது.

அதன்படி நேற்று மாலை தமிழிசை புதுச்சேரி வந்தடைந்தார். இன்று காலை 9 மணிக்கு  கவர்னர் மாளிகையில் துணை நிலை ஆளுநராக தமிழிசை முறைப்படி பொறுப்பேற்றுக்கொள்கிறார்.  ஆளும் கட்சி பெரும்பான்மையை நிரூபிக்க சட்டமன்றத்தை கூட்ட கவர்னர்  உத்தரவிட்டால், சட்டப்படி 15 நாட்கள் காலஅவகாசம் கேட்கலாம். ஆனால் இதனை கவர்னர் ஏற்றுக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் கவர்னரே இத்தனை நாட்கள் என அவகாசமும் வழங்கலாம் என தெரியவருகிறது. கவர்னர் கிரண்பேடி 3 நாட்களுக்கு முன்னதாக நீக்கப்பட்டது பாஜகவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எதற்காக அவர் முன்கூட்டியே நீக்கப்பட்டார் என தெரியாமல் தவித்து வருகின்றனர்.இதற்கிடையே உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தலைவர் ஜேபி நட்டா அழைப்பின் பேரில் பாஜக தலைவர் சாமிநாaதன், முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம், மேலிடப்பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா ஆகியோர் அவசரமாக டெல்லி  புறப்பட்டு சென்றுள்ளனர்.

அங்கு புதுச்சேரியின் அடுத்த கட்ட அரசியல் நகர்வுகள் குறித்து ஆலோசிக்கின்றனர். என். ஆர் காங்கிரசுடனான கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தொகுதி பங்கீடு, நியமன எம்எல்ஏக்கள் விவகாரம், ராஜ்யசபா எம்பி, முதல்வர் வேட்பாளர் குறித்து ஆலோசிக்கின்றனர். மேலும் வரும் 25ம் தேதி பிரதமர் மோடி புதுச்சேரிக்கு வந்து பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளார். முன்னதாக மேற்கொள்ளப்பட வேண்டிய தேர்தல் பணிகள் குறித்து அமித்ஷா சில ஆலோசனைகளை வழங்கவுள்ளார். நம்பிக்கை இல்லா தீர்மான விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் எப்படி நடந்து கொள்வது என்பது குறித்தும் கருத்து கேட்கவுள்ளார்.

தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில் ஆளும் அரசை கவிழ்த்தால் நமக்கு கெட்டபெயர் ஏற்படலாம். ஆளும் அரசுக்கு மக்கள் மத்தியில் அனுதாபமும் ஏற்படும். இப்படிப்பட்ட சூழலில் அமித்ஷா பாஜக முக்கிய நிர்வாகிகளை அழைத்து பேசுவது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>