×

அறுவடைக்கு தயாராக இருந்த 1500 ஏக்கர் நெற்கதிர்கள் சேதம்

உடுமலை, ஜன. 18:  உடுமலை அருகே உள்ள அமராவதி அணையில் இருந்து கல்லாபுரம்,ராமகுளம் வாய்க்கால் வழியாக சுமார் 3600 ஏக்கர் விளைநிலம் நேரடி பாசன வசதி பெற்று வருகிறது. இவற்றில் பெரும்பாலானவற்றில் நெல் சாகுபடியும், எஞ்சியவற்றில் மக்காச்சோளம், கரும்பு, தென்னை உள்ளிட்டவை சாகுபடி செய்யப்படுகிறது. கடந்த 3 மாதத்திற்கு முன்பாக கல்லாபுரம் பாசன வாய்க்கால் மூலம் பாசனவசதி பெறும் பகுதிகளில் சுமார் 1336 ஏக்கர் பரப்பில் விவசாயிகள் குண்டு ரகம் உள்ளிட்ட 4 நெல் ரகங்களை பயிர் செய்தனர். 120 நாட்கள் பயிரான இந்த ரக நெற்கதிர்கள் நன்கு விளைச்சலடைந்து இருந்தன.

இதே போல ராமகுளம் வாய்க்கால் மூலம் பாசன வசதி பெறும் பகுதிகளில் சுமார் 800 ஏக்கர் பரப்பில் நெல் சாகுபடி செய்யப்பட்டு,அவையும் ஒரிரு வாரங்களில் அறுவடை செய்யக் கூடிய அளவிற்கு தயார் நிலையில் இருந்தது. இந்நிலையில் பருவநிலை மாற்றம் காரணமாக தொடர்ந்து 15 நாட்களாக பெய்த மழை காரணமாக நெற்கதிர்கள் அனைத்தும் வயலில் சாய்ந்தன. ஈரம் உலராத நிலையில் விளைநிலத்தில் தேங்கியிருந்த மழைநீரில் நெற்கதிர்கள் மூழ்கி முளைப்பிடித்தன. ஏறக்குறைய 1500 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெற்கதிர்கள் அனைத்தும் நீரில் மூழ்கி சேதமாகின.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ஏக்கர் ஒன்றுக்கு ரூ.35 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரை செலவழித்துள்ளோம். பருவநிலை மாற்றம் காரணமாக ஏற்பட்டுள்ள இந்த சேதத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.40 ஆயிரம் வரை நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

எம்எல்ஏ நேரில் ஆய்வு: மடத்துகுளம் திமுக எம்எல்ஏ ஜெயராமகிருஷ்ணன் நேற்று மழைசேதங்கள் குறித்து  ருத்திராபாளையம், பூளவாடிப்புதூர், மாரக்காபாறை, வேல்நகர், கல்லாபுரம் பகுதிகளில் நேரில் பார்வையிட்டு விவசாயிகளை சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது, கலெக்டரிடம் பேசி உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி அளித்தார். உடன் சங்கராமநல்லூர் பேரூர் கழக செயலாளர் சாதிக்அலி, ஒன்றிய பொறுப்பாளர் சாகுல்அமீது,குப்புசாமி, வேளாண்மை கூட்டுறவு வங்கி சங்கத் தலைவர் மோகன்,கல்லாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் முத்துலட்சுமி பழனிச்சாமி, அப்துல்மஜீத், சுந்தரராஜன், முருகவேல், உத்தமன் ,துரையன், கொழுமம் ஊராட்சி மன்ற தலைவர் ரகுபதி, கதிரேசன், அப்துல்மஜீத், ஜின்னாப்பா ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags : paddy fields ,
× RELATED நெல்லையில் டிரோன்கள் பறக்கத் தடை