×

மாவோயிஸ்ட் அச்சுறுத்தல் உள்ள எல்லையோர காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் இல்லாததால் வழக்கு விசாரணை பாதிப்பு

மஞ்சூர், ஜன. 18:  எல்லையோர காவல் நிலையமான மஞ்சூர் காவல் நிலையத்தில் இரண்டு மாதங்களாக இன்ஸ்பெக்டர் நியமிக்காததால், வழக்கு விசாரணை, மக்கள் பாதுகாப்பு கேள்விகுறியாகியுள்ளது. நீலகிரி மாவட்டம் மஞ்சூர் மற்றும் எமரால்டு பகுதிகளில் இரண்டு காவல் நிலையங்கள் உள்ளது. ஒரு இன்ஸ்பெக்டர் தலைமையின் கீழ் மேற்படி இரண்டு காவல் நிலையங்களும் செயல்பட்டு வருகிறது. மஞ்சூர் காவல் நிலையத்திற்குட்பட்ட 42 கிராமங்களும், எமரால்டு காவல் நிலையத்திற்குட்பட்ட 30 கிராமங்கள் உள்பட 70க்கும் மேற்பட்ட கிராமங்களில் நடைபெறும் குற்ற சம்பவங்கள், விசாரணைகள், பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகள் இன்ஸ்பெக்டரால் மேற்கொள்ளப்படுகிறது.

இந்நிலையில் மஞ்சூர் பகுதி தமிழக-கேரளா எல்லையை ஒட்டி அமைந்துள்ளதால், இங்குள்ள காவல் நிலையமானது எல்லையோர காவல் நிலையமாக கருதப்படுகிறது. மஞ்சூர் காவல் நிலையத்திற்குட்பட்ட கிண்ணக்கொரை, அப்பர்பவானி, கோரகுந்தா பகுதிகள் கேரளா எல்லையில் அமைந்துள்ளதுடன் கேரளா வனப்பகுதிகளில் மாவோயிஸ்ட் நடமாட்டம் அதிகளவில் உள்ளது. இவர்கள் கிண்ணக்கொரை, மஞ்சூர் வழியாக தமிழக பகுதிக்குள் ஊடுருவவும், தாக்குதல் சம்பவங்களில் ஈடுபடவும் வாய்ப்புகள் உள்ளது. இதையடுத்து மஞ்சூர் காவல் நிலையத்திற்குட்பட்ட அப்பர்பவானி பகுதியில் அதிரடிபடை முகாம் மற்றும் கிண்ணக்கொரையில் நக்சல் தடுப்பு பிரிவு முகாமும் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.

இதேபோல் மஞ்சூரில் இருந்து கோவை மற்றும் கேரளா பகுதிகளுக்கு செல்லும் சாலையில் கெத்தை என்ற இடத்தில் மஞ்சூர் காவல் நிலையத்தின் சார்பில் சோதனைச்சாவடியும் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மஞ்சூர் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் பணியிடம் காலியாக உள்ளது. இங்கு இன்ஸ்பெக்டராக இருந்த தவுலத்நிஷா ஈரோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாறுதலாகி சென்றார். இவர் பணியிட மாறுதலாகி சென்று இரண்டு மாதங்களுக்கு மேலாகியும், மஞ்சூர் காவல் நிலையத்திற்கு இதுவரை புதிய இன்ஸ்பெக்டரை நியமிக்கவில்லை.

இதனால் மஞ்சூர் மற்றும் எமரால்டு காவல் நிலையங்களில் இன்ஸ்பெக்டர் இல்லாத நிலையில் குற்ற சம்பவங்கள் மற்றும் அதன் விசாரணைகள் அனைத்தும் ஊட்டி பகுதியில் உள்ள காவல் நிலைய இன்ஸ்பெக்டர்கள் மூலமாகவே மேற்கொள்ளப்படுகிறது. மேலும் விசாரணை உள்ளிட்ட பல்வேறு பணிகளில் கால தாமதம் ஏற்படுவதுடன் உரிய வழிகாட்டுதல் இல்லாமல் இன்ஸ்பெக்டரின் கீழ் பொறுப்பில் உள்ள போலீசாரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். 72 கிராமங்களின் காவல் கண்காணிப்பு, எல்லையோர பகுதி மற்றும் மாவோயிஸ்ட் அச்சுறுத்தல் போன்ற பல்வேறு காரணங்களால் முக்கியத்துவம் வாய்ந்த மஞ்சூர் காவல் நிலையத்திற்கு உடனடியாக இன்ஸ்பெக்டரை நியமிக்க மாவட்ட எஸ்.பி. நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

Tags : inspector ,border police station ,investigation ,Maoist ,
× RELATED கள்ளச்சாராயம் விற்ற வாலிபர் கைது