புதுச்சேரி, ஏப். 1: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி போட்டியிடும் தட்டாஞ்சாவடி தொகுதியில் நாதக பிரசார வாகனம் மீது மாம்பழத்தை வீசி கண்ணாடியை சேதப்படுத்திய தவெக ரவுடியை போலீசார் தேடி வருகின்றனர். புதுச்சேரியில் வாக்குபதிவுக்கு மிக குறைந்த நாட்களே இருப்பதால் தேர்தல் பிரசாரம் விறுவிறுப்பு கட்டத்தை எட்டியுள்ளது. ஒவ்வொரு வேட்பாளர்களும் வீடுவீடாக சென்று வாக்குசேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி நேற்று முன்தினம் இரவு முதல்வர் ரங்கசாமி போட்டியிடும் தட்டாஞ்சாவடி தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திக்குமார், ஜீவா நகர் காலனி செல்வ விநாயகர் கோயில் அருகே பிரசார வாகனம் செல்ல, நடந்து சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கிருந்த ஒரு பழக்கடையில் நின்றிருந்த நபர், திடீரென ஒரு மாம்பழத்தை கொண்டு நாம் தமிழர் கட்சி வேட்பாளரின் பிரசார வாகனத்தின் மீது வீசிவிட்டு தப்பிச் சென்றார்.
இதில் பிரசார வாகனத்தின் முன்பக்க கண்ணாடி சேதமடைந்த நிலையில், அங்கிருந்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.இதையடுத்து உடனே பிரசாரத்தை நிறுத்திய கார்த்திக்குமார், தனது கட்சியைச் சேர்ந்த சக வேட்பாளர்களுடன் உடனே கோரிமேடு காவல் நிலையத்தில் முறையிட்டார். அக்கட்சி பிரமுகரான முத்துபிள்ளைபாளையத்தைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவர் அளித்த புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் நாகராஜ் தலைமையிலான போலீசார் ஆபாச பேசுதல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட 3 பிரிவுகளின்கீழ் நேற்று வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர். விசாரணையில், பிரசார வாகனத்தின் மீது மாம்பழத்தை வீசியது தமிழக பகுதியான நாவற்குளத்தைச் சேர்ந்த மனோஜ் என்ற வசந்த் (35) என்பதும், தவெக தலைவர் விஜய் படத்தை சட்டை பாக்கெட்டில் வைத்திருந்ததும் தெரியவந்தது. மேலும் ரவுடியான இவர் மீது 2 அடிதடி வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவர, அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
