×

மாவட்டத்தில் 10,12ம் வகுப்புகளுக்கு நாளை முதல் பள்ளிகள் துவக்கம்

ஈரோடு, ஜன. 18: ஈரோடு மாவட்டத்தில் 10, 12ம் வகுப்புகளுக்கு நாளை முதல் பள்ளிகள் துவங்கப்பட உள்ளது. இதில், 54,352 மாணவ-மாணவிகள் பள்ளிக்கு வந்து செல்ல தேவையான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக நடப்பு கல்வி ஆண்டில் இதுவரை பள்ளிகள் திறக்கப்படவில்லை. ஆன்லைனில் மட்டுமே வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தமிழக அரசு உத்தரவின்பேரில், பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாணவ-மாணவிகளின் பெற்றோரிடம் கருத்து கேட்பு கூட்டம் கடந்த 4ம் தேதி முதல் அந்தந்த பள்ளிகளில் நடத்தப்பட்டது. இதன்பேரில், 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு மட்டும் பள்ளிகள் நாளை (19ம் தேதி) முதல் வகுப்பு துவங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.

இதற்கான முன்னேற்பாடு பணிகள் அனைத்து பள்ளிகளிலும் பள்ளிக்கல்வித்துறையினர் சார்பில், தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  இது குறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:  ஈரோடு மாவட்டத்தில் 10ம் வகுப்பில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் 216 பள்ளிகளில் 18,007 மாணவ-மாணவிகளும், 149 மெட்ரிக்குலேஷன் மற்றும் சுயநிதி (தனியார்) பள்ளிகளில் 9,870 மாணவ-மாணவிகளும், 38 சி.பி.எஸ்.இ மற்றும் பிற இன பள்ளிகளில் 1,765 என மொத்தம் 29,642 மாணவ-மாணவிகள் உள்ளனர். இதேபோல், 12ம் வகுப்பை பொறுத்தவரை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி, தனியார், சி.பி.எஸ்.இ. என மாவட்டத்தில் மொத்தம் உள்ள 403 பள்ளிகளில் 24 ஆயிரத்து 710 மாணவ-மாணவிகள் உள்ளனர்.

தமிழக அரசு உத்தரவின் பேரில், 19ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால், மாவட்டத்தில் 10, 12ம் வகுப்பு மாணவ-மாணவிகள் 54 ஆயிரத்து 352 பள்ளிக்கு வந்து செல்ல உள்ளனர். இதற்காக அந்தந்த மாவட்ட நிர்வாகம் உத்தரவின்பேரில், மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி பணியாளர்கள் மூலம் கிருமி நாசினி தெளித்து பள்ளி வளாகம், வகுப்பறைகள் சுத்தம் செய்திட முதன்மை கல்வி அலுவலர், கல்வி மாவட்ட அலுவலர் மூலம் உத்தரவிடப்பட்டுள்ளது.  மேலும், பள்ளிக்கு வரும் மாணவ-மாணவிகள் அனைவருக்கும் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்ய விட்டமின், ஜிங்க் மாத்திரைகள் பள்ளிகளிலேயே வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு, அதற்கான மாத்திரைகளும் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
 பள்ளியின் வளாகத்திலேயே உடல் வெப்பநிலையை பரிசோதித்து வகுப்பறைக்குள் செல்ல அனுமதிக்கப்படுவர். வகுப்பறைகளில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி 25 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். மாணவ, மாணவிகள் யாருக்கேனும் உடல் நிலை பாதிப்பு இருப்பது அறிந்தால், மருத்துவ துறையினரிடம் தகவல் தெரிவிப்பதோடு, தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags : schools ,district ,classes ,
× RELATED சிறுத்தை நடமாட்டத்தால் அரியலூர்...