×

10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்

ஈரோடு, பிப். 18:  ஈரோட்டில் வருவாய்த்துறை ஊழியர்கள் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழக அரசின் வருவாய்த்துறையின் அனைத்து நிலை ஊழியர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம், தனி ஊதியம் வழங்கப்பட வேண்டும். வருவாய் துறையில் புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள அலுவலர்களுக்கு மாவட்ட தலைநகரங்களில் அடிப்படை பயிற்சி வழங்கப்பட வேண்டும். கருணை அடிப்படையில் நியமனம் செய்யப்பட்ட அலுவலர்களின் பணி வரன்முறை செய்யும் அதிகாரத்தை மாவட்ட கலெக்டருக்கு வழங்க வேண்டும். காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும். பட்டதாரி அல்லாத அலுவலர்களின் பதவி உயர்வினை உத்தரவாதப்படுத்தி ஆணை வெளியிட வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியம் வழங்க வேண்டும். குடும்ப பாதுகாப்பு நிதியை ரூ.10 லட்சமாக உயர்த்தி வழங்கிட வேண்டும் உட்பட 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் நேற்று முதல் அனைத்து மாவட்டத்திலும் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக அறிவித்திருந்தனர். இதன்படி, ஈரோடு மாவட்டத்தில் வருவாய்த்துறை அலுவலர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தில் அலுவலக உதவியாளர்கள் முதல் தாசில்தார் வரை மாவட்டத்தில் மொத்தம் 360 பேர் பங்கேற்றனர். இதன் காரணமாக மாவட்டத்தில் உள்ள அனைத்து தாசில்தார் அலுவலகம், வட்ட வழங்கல் அலுவலகங்கள், கலெக்டர் அலுவலகம், ஆர்.டி.ஓ. அலுவலகங்கள் போதிய அலுவலர்கள் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டன.

Tags : strike ,revenue employees ,
× RELATED டெல்லியில் தலைமைத் தேர்தல்...