சத்தியமங்கலம் அருகே கரடி தாக்கி தொழிலாளி படுகாயம்

சத்தியமங்கலம்,  பிப். 18:    சத்தியமங்கலம் அருகே இயற்கை உபாதை கழிக்க சென்ற கூலித்தொழிலாளியை கரடி தாக்கியதில் படுகாயமடைந்தார்.  ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள சிக்கரசம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட  ராமபைலூர் தொட்டி கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட பழங்குடியின குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு வசிக்கும் பழங்குடியின மக்கள் ஆடு,  மாடு உள்ளிட்ட கால்நடைகளை மேய்த்தல் மற்றும் தோட்டங்களில் விவசாய கூலி  வேலைக்கு சென்று வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு ராமபைலூர்  தொட்டி கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி மாரப்பன், வனத்தையொட்டிய பகுதியில் இயற்கை உபாதை கழிக்க சென்றுள்ளார்.அப்போது, புதர்  மறைவில் இருந்த கரடி மாரப்பனை திடீரென தாக்கியது. மேலும் அவரது காலின் தொடை பகுதியை கடித்தது. மாரப்பனின் அலறல்  சத்தம் கேட்டு அப்பகுதி பொதுமக்கள் சென்று கரடியை விரட்டியடித்தனர். இதைத்தொடர்ந்து காலில் படுகாயமடைந்த மாரப்பனை மீட்டு  சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  இது குறித்து தகவலறிந்த  வனத்துறையினர் மருத்துவமனைக்குச் சென்று காயமடைந்த தொழிலாளி  மாரப்பனுக்கு சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தனர். வனப்பகுதியை  ஒட்டியுள்ள பகுதிகளில் கரடி, காட்டு மாடு, காட்டுப்பன்றி உள்ளிட்ட  வனவிலங்குகள் நடமாடுவதால், வனப்பகுதியை ஒட்டி வசிக்கும் மக்கள் மிகுந்த  எச்சரிக்கையாக இருக்குமாறு வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். இச்சம்பவம்  குறித்து சத்தியமங்கலம் வனத்துறையினர் மற்றும் போலீசார் விசாரணை செய்து  வருகின்றனர்.

Related Stories:

>