நன்றி குங்குமம் டாக்டர்
தாய்மை என்பது ஒரு வரமாகும். தாய்மை என்பது உணர்வுபூர்வமானது. ஆனால், இன்றைய சூழலில், 20 – 30 வயதுக்குட்பட்ட குழந்தை பெற முயற்சிக்கும் தம்பதிகளில் சுமார் 3 முதல் 5 சதவீதம் பேருக்கு தொடர் கருச்சிதைவு ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இவ்வாறு மீண்டும் மீண்டும் கர்ப்ப இழப்பு ஏற்படும்போது, அந்த தம்பதியர் இருவரின் மன நலத்தையும் அது பாதிக்கிறது. எனவே, இப்படி தொடர் கருச்சிதைவை எதிர்கொள்ளும் பெண்களுக்காக சென்னை, கிண்டியில் உள்ள ரெயின்போ மருத்துவமனையின் பர்த்ரைட் பிரிவு பிரத்யேகமாக ‘வண்ணம்’ என்ற புதிய சிகிச்சை மையத்தை தொடங்கியுள்ளது.
இந்த மையம் கருச்சிதைவுக்கான அடிப்படை காரணத்தைக் கண்டறிந்து சிகிச்சையளிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், சமீபத்தில் தொடர்ந்து நான்கு முறை கருச்சிதைவை சந்தித்த 35 வயதுப் பெண் ஒருவருக்கு, அளிக்கப்பட்ட முறையான பரிசோதனை, கண்காணிப்பு மற்றும் சிகிச்சையின் மூலம் அவர் ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுத்தார் என்று கூறுகிறார் மகப்பேறு மற்றும் மகளிர் நோயியல் நிபுணர் மருத்துவர் மாதங்கி ராஜகோபாலன். அவர் மேலும், தொடர் கருச்சிதைவுக்கான காரணம் மற்றும் தீர்வு குறித்து நம்முடன் பகிர்ந்து கொண்டவை:
தொடர் கருச்சிதைவு ஏற்படுவது ஏன்?
ஒரு பெண்ணுக்கு அடிக்கடி கருச்சிதைவு ஏற்படுவது என்பது, கரு சரியாக வளர்ச்சியடையாதபோது நிகழ்கின்றன. இது பெரும்பாலும் அசாதாரண எண்ணிக்கையிலான குரோமோசோம்களால் ஏற்படுகிறது. குரோமோசோம்கள் உடலின் ஒவ்வொரு செல்லிலும் உள்ளன, கருத்தரித்தல் நிகழும் காலத்தில், தாயின் முட்டையின் ஆரோக்கியம் மற்றும் விந்தணுவின் ஆரோக்கியத்தைப் பொருத்து இது அமைகிறது. அதனால், கர்ப்பத்துக்கு முயற்சிக்கும் ஆணும் பெண்ணும் அவர்களது உடல் ஆரோக்கியத்தை நல்லவிதமாக பராமரித்தாலே ஆரோக்கியமான கரு உருவாகும்.
உதாரணமாக சொல்ல வேண்டும் என்றால், ஒரு செடி வளர்வதற்கு முக்கியம் மண் வளம்தான். என்னதான் வீர்யம் உள்ள நல்ல விதையை விதைத்தாலும் மண்வளம் நன்றாக இருந்தால்தான் அந்த செடி நன்கு செழித்து வளரும். இங்கே மண்வளம் என்பது தாயின் ஆரோக்கியமாகும். எனவே, திருமணத்துக்கு தயாராகும் பெண்கள் தங்களது உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுத்து நல்லவிதமாக வைத்திருக்க வேண்டும்.
இது தவிர, தொடர் கர்ப்ப இழப்பிற்கான பிற காரணங்கள்
கருப்பை தொடர்பான பிரச்சினைகள் (Uterine Factors): கருப்பையில் உள்ள கட்டிகள், தசைநார்க்கட்டிகள் (Fibroids), பாலிப்ஸ், அல்லது பிறப்புறுப்பு குறைபாடுகள் (எ.கா: செப்டேட் கருப்பை) கருவை நிலைநிறுத்தவிடாமல் தடுக்கும்.
ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் (Hormonal Factors): கட்டுப்பாடற்ற நீரிழிவு, தைராய்டு கோளாறுகள், மற்றும் ப்ரோலாக்டின் அளவு அதிகரிப்பு போன்றவை கருச்சிதைவுக்கு வழிவகுக்கும். தன்னுடல் தாக்க நோய் (Immunological Factors): ஆன்டிபாஸ்போலிப்பிட் சிண்ட்ரோம் (Antiphospholipid syndrome) போன்ற நிலைமைகள், நோயெதிர்ப்பு மண்டலம் கருவைத் தாக்கி கருச்சிதைவை ஏற்படுத்தும்.
வாழ்க்கை முறை மற்றும் பிற காரணங்கள்: புகைப்பிடித்தல், மது அருந்துதல், அதீத காஃபின் உட்கொள்ளல், உடல் பருமன் மற்றும் கதிர்வீச்சு, நச்சுப் பொருட்களின் வெளிப்பாடு ஆகியவை ஆபத்தை அதிகரிக்கின்றன.விவரிக்கப்படாத காரணங்கள்: பல பரிசோதனைகளுக்குப் பிறகும், சில நேரங்களில் காரணத்தைக் கண்டறிய முடியாது.கர்ப்பம் தரித்த பெண்கள் எத்தனை மாதங்கள் வரை கவனமாக இருக்க வேண்டும். கர்ப்பம் தரித்த பெண்கள் இத்தனை மாதம் வரை கவனமாக இருக்க வேண்டும். பின்னர், தளர்வாக இருக்கலாம் என்பது போன்று எதுவும் இல்லை.
கருச்சிதைவுக்கு காரணம் முன்பு சொன்னது போன்று சரியில்லாத கரு, கர்ப்பப்பை பிரச்னை, ஹார்மோன் பிரச்னை போன்றவைதான் மற்றபடி தாய் பெட் ரெஸ்ட் எடுக்க வேண்டும். வேலைக்கு போகக் கூடாது. வீட்டில் வேலைகள் எதுவும் செய்யக் கூடாது என்று எதுவும் இல்லை. இவர்கள் ஆரோக்கியமான உணவு பழக்கங்களை கடைப்பிடித்தாலே போதுமானதாகும். பொதுவாக இரண்டுமுறைக்கு மேல் கருச்சிதைவு ஏற்பட்டால், அப்போது எதனால், ஏற்பட்டது, அதற்கான காரணங்கள் என்ன என்பதை மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும்.
அடிக்கடி கருச்சிதைவு ஏற்படுவதால் பிற்காலத்தில் உடல்நலத்தில் ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா?
இயற்கையாகவே கர்ப்ப இழப்பு ஏற்பட்டால் அது பிற்காலத்தில் உடல் ரீதியான எந்த பிரச்னையையும் உருவாக்காது. அதுவே, அவர்களாகவே, குழந்தை வேண்டாம் என்று அடிக்கடி கருகலைப்பு செய்து கொண்டால், அது பிற்காலத்தில் கர்ப்பப் பையில் ஏதேனும் பிரச்னையை உருவாக்கலாம்.
மீண்டும் மீண்டும் கர்ப்ப இழப்பு ஏற்படுவதை தவிர்ப்பது எப்படி?
கர்ப்ப இழப்பை தடுக்க வழிகள்
ஒரு பெண்ணுக்கு இரண்டு முறைக்கு மேல் கர்ப்ப இழப்பு ஏற்பட்டிருந்தால், அவர் அடுத்த முறை கர்ப்பம் தரிப்பதற்கு முன்பே அவரது கர்ப்ப இழப்புக்கான அடிப்படை காரணத்தை கண்டறிந்து அதை களைய வேண்டும். அடுத்ததாக, கர்ப்பம் தரித்தவுடனேயே அவ்வப்போது ஸ்கேன் மூலம் முறையான கண்காணிப்பு இருக்க வேண்டும். அதையும் தாண்டி கருவிற்கு ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால், ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து உரிய சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.
அதுபோன்று உறவுகளுக்குள் திருமணம் செய்யும்போது ஒரு ஜெனரேஷனில் கருச்சிதைவு ஏற்பட்டிருந்தால், அது அடுத்தடுத்த ஜெனரேஷனுக்கும் தொடர வாய்ப்பு அதிகம். அதனால்தான் இப்போது ரத்த உறவுகளுக்குள் திருமணம் செய்வதை தவிர்க்க வேண்டும் என்று கூறுகிறோம்.
அதுபோன்று அடிக்கடி கருச்சிதைவு சந்திக்கும் பெண்களுக்கு நாங்கள் தெரிவித்துக் கொள்வது என்னவென்றால், நீங்கள் தனியாக இல்லை. உங்களுடன் மருத்துவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் உங்களுக்கான பிரச்னையை சரி செய்வார்கள்.
மேலும், ஒரு சில பெண்கள் ஒருமுறை இருமுறை கருச்சிதைவு ஏற்பட்டாலும், அதற்கு அடுத்தமுறை இயற்கையாகவே கர்ப்பம் தரித்து நல்ல முறையில் குழந்தையை பெற்று எடுக்க முடியும். அதனால், மீண்டும் மீண்டும் கருச்சிதைவு ஏற்படுவதை கண்டு பயப்படவோ, அச்சப்படவோ தேவையில்லை, மருத்துவரை அணுகி உரிய சிகிச்சை எடுத்துக் கொண்டால், பிரச்னையில் இருந்து வெளியே வந்து ஆரோக்கியமான குழந்தையை பெற்று எடுக்க முடியும்.
தொகுப்பு: ஸ்ரீ தேவிகுமரேசன்
