×

வலங்கைமானில் கல்வி கட்டணம் செலுத்தாத மாணவர்கள் பள்ளியைவிட்டு வெளியேற்றம்

வலங்கைமான், பிப்.18: வலங்கைமானில் நீடாமங்கலம் சாலையில் தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகின்றது. கொரோனா தொற்று பரவலின் காரணமாக பள்ளி விடுமுறைக்கு பிறகு கடந்த 19ம் தேதி 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு பள்ளி திறக்கப்பட்டது. அதனை அடுத்து கடந்த 1ம் தேதி முதல் 9 மற்றும் 11ம் வகுப்புகளுக்கு பள்ளி திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றது. நேற்று காலை வழக்கம்போல் மாணவர்கள் பள்ளிக்கு வந்த நிலையில் 2ம் பருவ பள்ளி கட்டணத்தை செலுத்தாத மாணவர்களை வீட்டுக்கு செல்லுமாறு பள்ளி நிர்வாகம் கூறியுள்ளது. அதனையடுத்து நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் வீடு திரும்பினர். இந்நிலையில் பெற்றோர்கள் பள்ளிக்கு வந்து கல்வி கட்டணம் கட்டுவது குறித்து முன்னதாக எவ்வித தகவல்களும் தெரிவிக்கப்படாத நிலையில் மாணவ, மாணவிகளை வீட்டிற்கு ஏன் அனுப்பினீர்கள். மாணவர்களை நேற்று பள்ளியின் வெளியிலேயே பல மணி நேரம் நிறுத்தி வைத்தது ஏன்? பள்ளி கட்டணம் குறித்த தகவல்களை உடனடியாக பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டத்தினை கூட்டி தெரியப்படுத்த வேண்டும் எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

நாங்கள் ஆன்லைன் வகுப்பு நடைபெற்ற நிலையிலும் கூட முதல் பருவ கல்வி கட்டணத்தை முழுமையாக செலுத்தியுள்ளோம் எனக் கூறினர். முதல் பருவ கல்வி கட்டணம் முழுமையாக செலுத்தாத மாணவர்களுக்கு இணையவழி வகுப்பு நடத்தவில்லை என்றும் புத்தகங்கள் வழங்கப்படவில்லை என்றும் பெற்றோர்கள் தரப்பில் கூறப்பட்டது. பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த மண்டல துணை தாசில்தார் ஆனந்த் மற்றும் வலங்கைமான் போலீசார், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். கல்வி கட்டணம் குறித்து பெற்றோர்களுக்கு எவ்வித தகவலும் தெரிவிக்காமல் மாணவர்களை பள்ளியைவிட்டு வெளியேற்றக் கூடாது என பள்ளி நிர்வாகத்திடம் மண்டல துணை தாசில்தார் ஆனந்த் கேட்டுக்கொண்டார். பின்னர் பள்ளி நிர்வாகத்தின் தரப்பில் 2ம் பருவ கல்வி கட்டணத்தை இம்மாத இறுதிக்குள் செலுத்த கால அவகாசம் வழங்கினர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : school ,Valangaiman ,
× RELATED வத்திராயிருப்பு அரசு பள்ளி சார்பில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி