×

பேச்சுவார்த்தை முழுமையாக நடக்காவிட்டால் ‘ஸ்டிரைக்’ அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் முடிவு

தஞ்சை, பிப்.18:  தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர்களின் 14 வது ஊதிய ஒப்பந்தம் பேசி 2019 முதல் ஊதிய உயர்வு அமல்படுத்த பட்டிருக்க வேண்டும். தொமுச, சிஐடியூ, ஏஐடியூசி உள்ளிட்ட அனைத்து பேரவை சங்கங்களும் கோரிக்கை பட்டியல் அளித்து ஒரு வருடம் ஆகிய பின்பும் பல கட்ட போராட்டங்கள் நடத்தப் பட்ட பின்பும் ஒன்றரை வருடமாக இதுநாள்வரை ஊதிய ஒப்பந்தம் முறையாக பேசப்படவில்லை. அனைத்து சங்கமும் வேலைநிறுத்த நோட்டீஸ் அளித்த பின்பு தொழிலாளர் நல ஆணையர் அறிவுறுத்தலின்படி ஒப்புக்காக முதல்கட்ட பேச்சுவார்த்தை பேசப்பட்டது. அதற்குப் பிறகு பேசப்படாமல் இழுத்தடிப்பு செய்த நேரத்தில் அனைத்து பணிமனைகள் முன்பும் காத்திருப்பு போராட்டம் நடத்தி பிப்ரவரி 15ம் தேதி பேச்சுவார்த்தை நடைபெறும் என்று அறிவித்து பின்னர் பிப்ரவரி 18ம் தேதி பேச்சுவார்த்தை நடைபெறுவதாக அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

முறையாக பேச்சுவார்த்தையை அரசுத் தரப்பும் கழக நிர்வாகமும் நடத்தப்படவில்லை என்றால் நாளை(இன்று) மாலை 4 மணி முதல் எந்த நேரமும் பேருந்துகள் நிறுத்தப்பட வேண்டும். வேலை நிறுத்தம் செய்யப்படவேண்டும் என்ற அறிவிப்பை அனைத்து சங்க கூட்டமைப்பின் நிர்வாகிகள் தஞ்சாவூர் கரந்தை புறநகர் கிளை முன்பும், தஞ்சை நகர கிளை முன்பும் நடைபெற்ற வேலைநிறுத்த தயாரிப்பு கூட்டத்தில் அனைத்து தொழிலாளர்களிடம் விளக்கி பேசப்பட்டது. இதில் தொமுச பொதுச் செயலாளர் பாண்டியன், சிஐடியூ பொதுச்செயலாளர் கோவிந்தராஜ், தலைவர் மணிமாறன், ஏஐடியூசி மாநில துணைத்தலைவர் துரை மதிவாணன், பொதுச் செயலாளர் கஸ்தூரி, ஐஎன்டியூசி தலைவர் செல்வராஜ் உள்ளிட்ட பலர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். தஞ்சை நகர் கிளையில் நடைபெற்ற கூட்டத்திற்கு தொமுச துணை பொதுச் செயலாளர் ஜெயச்சந்திரன் தலைமை வகித்தார். புறநகர் கிளையில் நடைபெற்ற கூட்டத்திற்கு தொமுச செயலாளர் கோவிந்தராஜ் தலைமை வகித்தார்.

Tags : negotiations ,State Transport Corporation ,
× RELATED திருச்சியில் இருந்து ராமேஸ்வரம்...