×

விராலிமலை முருகன் கோயிலில் 25ம் தேதி கும்பாபிஷேக விழா தமிழில் மந்திரம் ஓதி நடத்த வலியுறுத்தல்

புதுக்கோட்டை, பிப்.18: வருகிற 25ம் தேதி நடைபெற உள்ள விராலிமலை முருகன் கோயில் கும்பாபிஷேக விழாவில் தமிழில் மந்திரங்கள் ஓதி குடமுழுக்கு நடத்த வேண்டுமென தெய்வீகத் தமிழ் பேரவை என்ற அமைப்பினர் இந்து சமய அறநிலைத்துறை உதவி ஆணையர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர். புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான பிரசித்தி பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கும்பாபிஷேக விழா வருகிற 25ம் தேதி நடைபெறும் என இந்து சமய அறநிலையத் துறையால் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அருணகிரிநாதரால் பாடப்பெற்ற புகழ்பெற்ற தலமான விராலிமலை சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு விழாவை தமிழில் மந்திரங்கள் ஓதி நடத்த வேண்டும் என வலியுறுத்தி தெய்வீகத் தமிழ் பேரவை என்ற அமைப்பினர் நேற்று புதுக்கோட்டையில் உள்ள இந்து சமய அறநிலை துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.
அப்போது அவர்கள் கூறுகையில், விராலிமலை பாலசுப்பிரமணியர் கோயில் அருணகிரிநாதர் உள்ளிட்ட சித்தர்களால் பாடப்பெற்ற புகழ்பெற்ற தலம் என்றும், தமிழர்களின் பண்பாட்டை பறைசாற்றும் இக்கோயிலின் குடமுழுக்கு தமிழில்தான் நடத்த வேண்டுமென்றும், தமிழகத்தில் உள்ள அரசு கோயில்களில் தமிழில் மந்திரம் ஓதி பூஜை செய்வதற்கு தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை ஏற்கனவே நூல்கள் அச்சிட்டு வெளியிட உள்ளது. ஏற்கனவே தஞ்சை பெருவுடையார் கோவிலின் குடமுழுக்கு விழா நீதிமன்ற ஆணைப்படி தமிழில் மந்திரம் ஓதி குடமுழுக்கு நடத்தப்பட்ட நிலையில் விராலிமலை பாலசுப்ரமணிய சுவாமி கோயிலும் வருகிற 25ம் தேதி தமிழில் மந்திரம் ஓதி குடமுழுக்கு நடத்திடவும், தமிழ் ஓதுவார் பெயர்களை குடமுழுக்கு அழைப்பிதழில் அச்சிட வேண்டும் எனவும் தெய்வீக தமிழ்பேரவை அமைப்பினர் கூறினர்.

Tags : Kumbabhishekam ,festival ,Viralimalai Murugan Temple ,
× RELATED தாய்லாந்தில் தண்ணீர்...