×

தமிழ்நாட்டில் இதுவரை மொத்தமாக ரூ.296.4 கோடி மதிப்புள்ள பணம் பொருட்கள் பறிமுதல்: தேர்தல் ஆணையம்

 

சென்னை: தமிழ்நாட்டில் இதுவரை மொத்தமாக ரூ.296.4 கோடி மதிப்புள்ள பணம் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. ரூ.61.98 கோடி ரொக்கம், ரூ.197.35 கோடி மதிப்புள்ள தங்கம், வெள்ளி போன்ற உலோகங்கள், ரூ.8.39 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள், ரூ.1.17 கோடி மதிப்புள்ள மதுபானம், இதர பொருட்கள் மற்றும் இலவசங்கள் ரூ.27.51 கோடிக்கு பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.

2026 தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல் நடத்தப்படுவதன் ஒரு பகுதியாக, மாநிலம் முழுவதும் பல்வேறு தரப்பினருக்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. அனைத்து 234 சட்டமன்றத் தொகுதிகளிலும், வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள் மற்றும் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான முதற்கட்டப் பயிற்சி 28.03.2026 மற்றும் 29.03.2026 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.

இப்பயிற்சித் திட்டத்தில், 3,32,231 அலுவலர்களுக்கு வாக்குச்சாவடி தலைமை அலுவலர் மற்றும் வாக்குப்பதிவு அலுவலர்களின் கடமைகள், பங்களிப்புகள் மற்றும் பொறுப்புகள் தொடர்பான பாடங்களில் பயிற்சி அளிக்கப்பட்டது. தேர்தல் தொடர்பான பணிகளைத் திறம்பட நிர்வகிப்பதற்கான அவர்களின் திறனை வலுப்படுத்தவும், நடைமுறைகளைச் சரியாகச் செயல்படுத்துவதை உறுதி செய்வதற்கும், சட்டத்திற்கு உட்பட்டு 2026 தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தலை சுதந்திரமாகவும், நேர்மையாகவும் மற்றும் வெளிப்படையாகவும் நடத்துவதற்கு தங்களை தயார்படுத்திக் கொள்வதை உறுதி செய்வதே இந்தப் பயிற்சித் திட்டத்தின் நோக்கமாகும்.

2026 தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல் பணிகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள், வாக்குப்பதிவு அலுவலர்கள், வாக்கு எண்ணும் மேற்பார்வையாளர், வாக்கு எண்ணும் உதவியாளர் மற்றும் நுண் பார்வையாளர்களுக்கு (Micro Observers) வழங்கப்பட வேண்டிய ஊதிய விகிதங்களை இந்திய தேர்தல் ஆணையம் உயர்த்தியுள்ளது.

வாக்குச்சாவடி தலைமை அலுவலர்களுக்கு பழைய ஊதியம் ரூ.1700ல் இருந்து புதிய ஊதியமாக ரூ.3000 வரை உயர்த்தியுள்ளது. வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு ரூ.1300ல் இருந்து ரூ.2600 ஆக உயர்வு. வாக்கு எண்ணும் மேற்பார்வையாளர்களுக்கு ரூ.850ல் இருந்து ரூ.1500 ஆக உயர்வு. வாக்கு எண்ணும் உதவியாளர்களுக்கு ரூ.650ல் இருந்து ரூ.1400 ஆக உயர்வு. நுண் பார்வையாளர்களுக்கு ரூ.1000ல் இருந்து ரூ.2000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

Tags : Tamil Nadu ,Election Commission ,Chennai ,
× RELATED த.வெ.க. தலைவர் விஜய்யிடம் ரூ.404.58 கோடிக்கு...