×

அரியலூர் ஒன்றியத்தில் 17,200 மரக்கன்றுகள் நட இலக்கு நிர்ணயம்

அரியலூர், பிப்.18: அரியலூர் ஒன்றியத்தில் 17,200 மரக்கன்றுகள் நட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அரியலூர் மாவட்டம், இலுப்பையூர் ஊராட்சி, பொய்யாதநல்லூர் மெயின் ரோட்டில் உள்ள கருத்துடையான் ஏரியில் ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் பலவகை மரக்கன்றுகளை கலெக்டர் ரத்னா நட்டு வைத்தார். தொடர்ந்து அவர் பேசுகையில், அரியலூர் மாவட்டம் முழுவதும் பசுமையாக்கும் நோக்கில் வளர்ச்சித்துறையின் சார்பில் ஏரி, குளம், குட்டை மற்றும் நீர் வழித்தடங்களில் உதியம், பூவரசம், வாகை போன்ற மரங்கள் நடப்பட்டு வருகின்றன. அதன்படி, அரியலூர் ஒன்றியத்திற்குட்பட்ட 37 ஊராட்சிகளிலுள்ள பல்வேறு அரசுத்துறை மூலம் 17,200 மரங்கள் நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் சிறப்புடன் மேற்கொள்ளும் வகையில் அப்பகுதிகளிலுள்ள தன்னார்வலர்கள், பள்ளி மாணவ, மாணவிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி, வளர்ச்சித்துறையின் சார்பில் குளம், ஏரி மற்றும் குட்டைகளின் அருகில் நடுவதற்காக 9,500 கன்றுகளும், கல்வித்துறையின் சார்பில் பள்ளி வளாகங்களை சுற்றிலும் நடுவதற்காக 3,000 கன்றுகளும், அங்கன்வாடி மையங்கள் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் நடுவதற்காக 500 கன்றுகளும் உள்ளிட்ட பல்வேறு துறைகள் என மொத்தம் 17,200 மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கப்படவுள்ளன. எனவே, அரியலூர் மாவட்டத்தை பசுமை நிறைந்த மாவட்டமாக்க அனைவரும் முன்வர வேண்டும் என கலெக்டர் ரத்னா தெரிவித்துள்ளார். இந்நிகழ்ச்சியில், திட்ட இயக்குநர் சுந்தர்ராஜன், பிடிஓ., நாராயணன், ஊராட்சி தலைவர் அன்பழகி மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags : Target ,Ariyalur Union ,
× RELATED இந்தியாவிற்காக விளையாடுவதே எனது...