×

பொள்ளாச்சி, வால்பாறை சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடி நிலைய அலுவலர்களுக்கு பயிற்சி

பொள்ளாச்சி : பொள்ளாச்சியில் நேற்று சட்டமன்ற தேர்தலின் போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறை குறித்து வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நகராட்சி மற்றும் வடக்கு ஒன்றியம்,கிணத்துக்கடவு மேற்கு ஒன்றியத்தின் ஒரு பகுதி உள்ளிட்டவைகளில் மொத்தம் 269 வாக்குச்சாவடிகள் உள்ளன. அதுபோல் வால்பாறை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியான ஆனைமலை தாலுகா,வால்பாறை தாலுகா பகுதிகளில் மொத்தம் 251 வாக்குச்சாவடிகள் உள்ளன.

இந்நிலையில் வரும் ஏப்ரல் 23ம் தேதி வாக்குப்பதிவு நடப்பதையொட்டி வாக்குச்சாவடி நிலைய அலுவலர்களுக்கு தேர்தல் வாக்குப்பதிவின்போது கடைபிடிக்க வேண்டிய நன்னடத்தை விதிமுறைகள் குறித்த பயிற்சி முகாம் உடுமலை ரோட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நேற்று நடைபெற்றது.

இதற்கு சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும் சப்.கலெக்டருமான ராமகிருஷ்ணசாமி தலைமை தாங்கினார். உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள்,தேர்தல் பிரிவு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த முகாமில், சட்டமன்றத்திற்குட்பட்ட வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இந்த முகாமில் வாக்குப்பதிவின் போது கடைபிடிக்க வேண்டிய நன்னடத்தை விதிமுறைகள்,வாக்காளர்களிடம் எவ்வாறு நடந்து கொள்வது என்பது குறித்து என இரண்டு கட்டமாக எடுத்துரைக்கப்பட்டது.மேலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்தும் விளக்கி கூறப்பட்டது.

இது குறித்து தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது: சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஒவ்வொரு வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதிகள் உள்ளதா என்று ஆய்வு மேற்கொள்ள வேண்டும். அங்கு ஏதேனும் குறைபாடு இருந்தால் உடன் நிவர்த்தி செய்ய வேண்டும்.பொதுமக்கள் அளிக்கும் புகார் மற்றும் அவர்களது குறைகளை உடனுக்குடன் மேல் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

எந்த பகுதியில் என்ன குறைகள் உள்ளது என்று அறிந்து கொள்ள வேண்டும். தேர்தல் விதிமுறைகளை மீறி நடப்பவர்கள் குறித்து உடன் அதிகாரிகளிடம் தகவல் தெரிவிக்க வேண்டும். வாக்குப்பதிவு துவங்கும் ஒரு மணி நேரத்திற்கு முன்னதாகவே தேர்தல் பணியாளர்கள், அந்தந்த வாக்குச்சாவடிகளில் இருக்க வேண்டும். வாக்குப்பதிவு மின்னணு இயந்திரங்கள் நல்ல முறையில் உள்ளதா என்று தெரிந்து கொள்ள வேண்டும்.

வாக்காளர்கள் வாக்களிக்கும் முறையில் சந்தேகம் இருந்தால் அதனை நிவர்த்தி செய்ய வேண்டும். தேர்தலின்போது வாக்குசாவடி பகுதியில் அசம்பாவிதம் ஏதும் நடக்காமல் இருக்க கண்காணிக்க வேண்டும். தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள புதிய விதி முறைகளை முழுமையாக கடைபிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பஸ் நிலையம், மக்கள் கூடும் இடங்களில் தேர்தலில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

தேர்தல் விதிமுறை அமல்படுத்தப்பட்டுள்ளதால் அரசியல் கட்சியினர் விளம்பரங்கள் முழுமையாக அப்புறப்படுத்த வேண்டும். வாக்குச்சாவடி அமைந்துள்ள பகுதியிலிருந்து 100 மீட்டருக்குள் அரசியல் கட்சியினரின் தேர்தல் அலுவலகம் இல்லாமல் பார்த்து கொள்ள வேண்டும்.

அந்தந்த வாக்குச்சாவடிகளில் குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, மின்சார வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முழுமையாக உள்ளதா என்று கண்டறிய வேண்டும். போக்குவரத்து வசதி குறைவாக வெகுதூரத்தில் உள்ள வாக்குச்சாவடி மையங்களுக்கு, வாக்களிக்க வருவோர் வசதிக்காக தேர்தல் பணியில் ஈடுபடுபவர்களே, தங்களுக்கு வழங்கப்பட்ட வாகனங்களில் வாக்காளர்களை அழைத்து வரப்பட வேண்டும்.

அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வீடியோ பதிவு செய்யப்படுவதுடன், வாக்குச்சாவடி நிலையத்தில் வாக்குப்பதிவு துவங்கும் நேரம் முதல் நிறைவடையும் வரையிலும் உள்ள நேரத்த்தை பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.

Tags : Pollachi ,Valparai Assembly Constituency ,Assembly elections ,
× RELATED தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில்...