தர்மபுரி : சட்டமன்ற தேர்தலையொட்டி, தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சோதனைச்சாவடிகளில் கலெக்டர் சதீஸ் ஆய்வு செய்து வருகிறார்.தர்மபுரி மாவட்டத்தில், வரும் ஏப்ரல் 23ம் தேதி தேர்தல் நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.
பதற்றமான வாக்குச்சாவடிகள் 150 உள்ளன. மேலும் பொதுமக்கள், தைரியமாக வாக்களிக்கும் வகையில், துணை ராணுவ வீரர்கள் அணிவகுப்பு ஆங்காங்கே நடந்தது. மற்றொரு புறத்தில் 100 சதவீத வாக்குப்பதிவு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும், தேர்தல் பாதுகாப்பிற்காக தர்மபுரி மாவட்டத்தில் துணை ராணுவம் இதுவரை 7 கம்பெனிகள் வந்துள்ளன. ஒரு கம்பெனி என்பது 80 முதல் 100 வீரர்கள் இருப்பார்கள்.
அதே ேபால் மாவட்டத்தில், 11 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், வனப்பகுதி அதிகமாக இருப்பதால் சிசிடிவி கேமரா மூலம் கண்காணிக்கப்படுகிறது. இதற்காக கண்ட்ரோல் ரூம் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.
தேர்தல் விதிமுறையொட்டி ரூ.50 ஆயிரத்துக்கு மேல் ரொக்கப்பணம் கொண்டு செல்லக்கூடாது. அதற்கு மேல் கொண்டு செல்ல வேண்டும் என்றால் உரிய ரசீது வைத்திருக்க வேண்டும். இல்லையென்றால் பறிமுதல் செய்யப்படும்.
உரிய ரசீது கொடுத்து பணத்தை பெற்று செல்லலாம். இந்நிலையில் மாவட்டத்தில், பறக்கும்படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டு வருகிறது.
இதுவரை பல லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த சோதனையை மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான சதீஸ் திடீர் ஆய்வு நடத்தி வருகிறார். சமீபத்தில் மாரண்டஅள்ளி காடுசெட்டிப்பட்டி சோதனை சாவடி, பாப்பிரெட்டிப்பட்டி மஞ்சவாடி கணவாய், கோம்பூர் சோதனைச்சாவடியில் கலெக்டர் திடீரென ஆய்வு மேற்கொண்டார். இதுபோல் பறக்கும் படையினர் மற்றும் நிலையான கண்காணிப்பு குழுவினரால் வாகன தணிக்கை செய்வதை கலெக்டர் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறார்.
