×

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் பங்குனி பெருவிழா; இன்று அறுபத்து மூன்று நாயன்மார்கள் வீதியுலா: தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் பங்குனிப் பெருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. நமச்சிவாய கோஷத்துடன் பக்தர்கள் கலந்துகொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர். இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். சென்னையில் உள்ள சிவன் கோயில்களில் மிகவும் பிரசித்தி பெற்றது மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில். இங்கு ஆண்டுதோறும் பல்வேறு விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படும்.

அந்த வகையில் 10 நாட்கள் நடக்கும் பங்குனி பெருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். இதில் முக்கிய நிகழ்வான தேரோட்டத்தின்போதும், அறுபத்து மூவர் திருவிழாவின் போதும், கோயிலின் 4 மாட வீதிகளில் உலா வரும் தேரோட்டத்தை காண லட்சக்கணக்கான பொதுமக்கள் சென்னை மட்டுமின்றி, பல்வேறு ஊர்களில் இருந்து வருவார்கள்.

இந்நிலையில், இந்த ஆண்டுக்கான வருடாந்திர பங்குனிப் பெருவிழா மற்றும் அறுபத்து மூவர் திருவிழா கடந்த 21ம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. இந்த திருவிழா வரும் ஏப்ரல் 1ம் தேதி வரை நடைபெற உள்ளது. பங்குனி விழாவின் 7ம் நாளான நேற்று காலை தேரோட்டம் வெகு விமர்சையாக நடந்தது. முன்னதாக சுவாமி சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினார். சிறப்பு வழிபாடுகளுக்கு பின் ஏராளமான பக்தர்கள் வடம் பிடிக்க நான்கு மாட வீதிகளில் தேரோட்டம் நடந்தது. நமச்சிவாய கோஷத்துடன் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

கோயிலினை சுற்றியும் நடந்த அன்னதானத்தில் ஏராளமான மக்கள் பசியாறி சென்றனர். இதை தொடர்ந்து, 8ம் நாள் விழாவாக இன்று அறுபத்து மூன்று நாயன்மார்கள் வீதியுலா நடைபெறுகிறது. மார்ச் 31ம் தேதி (நாளை) ஐந்திருமேனிகள் விழா நடக்க இருக்கிறது. ஏப். 1ம் தேதி தீர்த்தவாரி நிகழ்வும், தொடர்ந்து இரவு 8 மணிக்கு திருக்கல்யாண உற்சவத்தோடு கொடி இறக்கப்பட்டு பங்குனி விழா நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோயில் அறங்காவல் குழுவினர் சிறப்பாக செய்துள்ளனர்.

Tags : Mahilapur Kabaliswarar Temple Bhanguni Ceremony ,Nayanmars ,Vidiula ,Terotata ,Derotam ,Mahilapur Kabaliswarar Temple Bhagunif Ceremony ,Shiva Temples ,Chennai ,Maylapur ,
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை...