×

அரவக்குறிச்சி பகுதி ெபாருள் விற்பனைக்கு வாகனங்களில் பொருத்திய ஒலிப்பெருக்கி அதிக சத்தத்தால் மக்கள் கடும் அவதி

அரவக்குறிச்சி, பிப். 18: அரவக்குறிச்சி பகுதியில் இயங்கி வரும் பல்வேறு வியாபார விற்பனை வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள ஒலிப்பெருக்கிகளால் ஏற்படும் அளவுக்கு மீறிய சத்தத்தால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டி கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அரவக்குறிச்சி ஒன்றியப் பகுதிகளில், ஆப்பிள், ஆரஞ்சு, இஞ்சி, தக்காளி, வெங்காயம், பூண்டு, நிலக்கடலை, என்று பல வகையான உணவு பொருள்களை சிறிய சரக்கு வாகனங்களில் கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். இவ்வாறு விற்பனை செய்யும் வியாபார வாகனங்களில் ஒலிப்பெருக்கிகளை கட்டி விற்கும் பொருளைப் பற்றி பதிவு செய்யப்பட்ட விளம்பரங்களை அதிக சத்தத்தில் ஒலிபரப்புகின்றனர்.மக்கள் அதிக அளவில் கூடும் பஸ் ஸ்டான்ட், கடைவீதி, தாலுகா அலுவலகம், பள்ளிகள், வங்கிகள் போன்ற முக்கிய அரசு அலுவலக பகுதிகளிலும், நகரின் நெரிசலான வீதிகளிலும் விளம்பரம் செய்கின்றனர். இதில் இடை விடாமல் திரும்ப திரும்ப, அதிக அளவில் ஒலியை எழுப்பும் திறன் கொண்ட ஒலி பெருக்கிகள் மூலம் பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர்.

இது மட்டுமல்லாமல் ஒரே சமயத்தில், ஒரே இடத்தில் நாலைந்து வியாபார வாகனங்களை நெரிசலான இடங்களில் தங்களின் வாகனங்களை நிறுத்தி வியாபாரத்திற்காக போட்டி போட்டுக் கொண்டு ஒலியின் அளவை அதிகப்படுத்தி விளம்பரம் செய்கின்றனர். இதனால் சாலைகளில் சத்தம் காதை பிளக்கின்றது. இதனால் வீடுகளில் உள்ள குழந்தைகள், நோய்வாய்பட்ட முதியவர்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகின்றனர். மேலும் அப்பகுதியில் நடந்து செல்வோர் , இரு சக்கர வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் தங்களுக்கு பின்னால் வரும் பஸ், மற்றும் கனரக வாகனங்கள் வருவது தெரியாமல் வழி விடாமல் செல்கின்றனர். இதனால் அப்பகுதிகளில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல், சிறு விபத்துகள் ஏற்படுகின்றன.எனவே அதிக ஒலி எழுப்பும் வகையில் உள்ள சாலை வியாபார . வாகனங்களில் இருந்து உரிய அனுமதியின்றி பொருத்தப்பட்டுள்ள ஒலிப் பெருக்கிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க பொது மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : area ,Aravakurichi ,
× RELATED கரூர் அருகே அரவக்குறிச்சி...