கடத்தப்பட்ட மாணவன் மீட்பு: 5 பேர் கும்பல் கைது

புழல்: செங்குன்றம் புதுநகர் பகுதியை சேர்ந்த காய்கறி வியாபாரியான மாரியப்பன்(55) மகன் கணேசன்(16). அங்குள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். நேற்று மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு நடந்து  செல்லும் போது காரில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் மாணவனை திடீர் என்று கடத்தியது. இதனால், அதிர்ச்சி அடைந்த பள்ளி மாணவர்களும், பொதுமக்களும் காரை துரத்தி சென்றனர். அப்போது கடத்தல் கும்பலை சேர்ந்த சந்தோஷ்குமார் (22) என்பவன் மட்டும் பிடிபட்டார். அவரை பிடித்து பொதுமக்கள் செங்குன்றம் போலீசிடம் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணையில் புதுக்கோட்டையை சேர்ந்தவன் சந்தோஷ்குமார் என்றும் கடத்தப்பட்ட மாணவனின் அக்கா ஜனனிக்கு கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு பூபதி என்பவருடன் திருமணம் நடந்து கணவன், மனைவி பிரிந்து இருப்பதாகவும், மனைவியின் குடும்பத்தினரை மிரட்டவே பூபதியுடன் மாணவனை கடத்த வந்ததாக பிடிபட்ட சந்தோஷ்குமார் போலீசாரிடம் தெரிவித்துள்ளான்.

செங்குன்றம் போலீசார் வயர்லெஸ் மூலம் அனைத்து காவல் நிலையங்களுக்கும் தகவல் தெரிவித்தனர். இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது  மின்னல் வேகத்தில் வந்த ஒரு காரை மடக்கி சோதனை செய்ததில் கடத்தப்பட்ட மாணவன் கணேசன் மற்றும் புதுக்கோட்டையைச் சேர்ந்த ஐந்து பேரும் என தெரியவந்தது இதுகுறித்து அச்சரப்பாக்கம் போலீசார் நேற்றிரவு செங்குன்றம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். செங்குன்றம் போலீசார் அச்சரப்பாக்கம் சென்றுள்ளனர். அவர்கள் வந்தபிறகுதான் உண்மை தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

Related Stories:

More