×

சூளகிரி அருகே பயிர்களை நாசம் செய்யும் யானைகள்

ஓசூர், பிப்.18: சூளகிரி அருகே ஒட்டையனூர் கிராமத்தில், 2 ஒற்றை யானைகள் முகாமிட்டு பயிர்களை நாசம் செய்து வருவதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.  கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சானமாவு வனப்பகுதியில் 100க்கும் மேற்பட்ட யானைகள் கடந்த 2 மாதமாக முகாமிட்டு, அப்பகுதியில் உள்ள விவசாய பயிர்களை சேதப்படுத்தி வந்தன. இதையடுத்து, அந்த யானைகளை தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்கு வனத்துறையினர் விரட்டியடித்தனர். அதில் 10 யானைகள் மட்டும் சானமாவு வனப்பகுதியில் தொடர்ந்து முகாமிட்டிருந்தன. இதிலும் 8 யானைகள் தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்கு விரட்டப்பட்டன. மீதமுள்ள 2 யானைகள் தனித்தனியே பிரிந்து சானமாவு, பீர்ஜேப்பள்ளி, ராமாபுரம், கோபசந்திரம் ஆகிய வனப்பகுதிகளில் சுற்றி வருகின்றன. இந்த யானைகள், அப்பகுதி கிராமங்களில் பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன.

இந்நிலையில், நேற்று முன்தினம் சூளகிரி அடுத்த ஒட்டையனூர் கிராமத்திற்கு சென்ற யானைகள், அங்கு பயிரிடப்பட்டிருந்த ராகி, முட்டைகோஸ், நெல் உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தின. இதனால் அப்பகுதி மக்கள் கவலையடைந்துள்ளனர். எனவே, ஒற்றை யானைகளை அடர்ந்த பகுதிக்கு வனத்துறையினர் விரட்ட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், யானைகளால் சேதமடைந்த பயிர்களுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என  வலியுறுத்தியுள்ளனர்.

Tags : Choolagiri ,
× RELATED காரில் கொண்டு சென்ற ₹1.67 லட்சம் பறிமுதல்